ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிரான மனுவை வாபஸ் பெற நடவடிக்கை: இந்திய பிராணிகள் நல வாரியம் தகவல்

ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிரான மனுவை வாபஸ் பெற நடவடிக்கை: இந்திய பிராணிகள் நல வாரியம் தகவல்
Updated on
1 min read

இந்திய மிருகவதை தடுப்புச் சட்டம்-1960-ஐ திருத்தம் செய்வது தொடர்பான புதிய சட்ட மசோதா, தமிழக சட்டப்பேரவையில் கடந்த 23-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதில், தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எந்த தடையும் ஏற்படாத வகையில் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டன. இந்த மசோதா குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் இந்திய பிராணிகள் நல வாரியத்தின் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் நேற்று முன்தினம் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு நிறைவேற்றியுள்ள புதிய சட்டம், மத்திய அரசின் மிருகவதை தடுப்பு சட்டத்துக்கு எதிரானது என்பதால், அதை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டி ருந்தது.

இதற்கிடையே, இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் எப்படி தாக்கல் ஆனது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பிராணிகள் நல வாரியத்தின் வழக்கறிஞராக செயல்பட்டு வரும் அஞ்சலி சர்மா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். கேரளாவில் நாய்கள் கொல்லப்படுவதை எதிர்த்து மனு தாக்கல் செய்வதற்காக வழங்கப்பட்ட அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அவர் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்திய பிராணிகள் நல வாரியத்தின் சார்பில் அதன் செயலாளர் எம்.ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் எண்ணம் எதுவும் இல்லை. அப்படி ஏதாவது வழக்கு தொடரப்பட்டிருந்தால், அந்த வழக்கு வாபஸ் பெறப்படும்” என்று அறிவித்துள்ளார்.

மேலும், வழக்கறிஞர் அஞ்சலி சர்மாவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், “தமிழக அரசின் புதிய சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர்வது என்றால், அதற்கு பிராணிகள் நல வாரியத்தின் முன் அனுமதி பெறப்பட வேண்டும். அப்படி அனுமதி பெறாமல் வழக்கு தாக்கலாகி இருந்தால், அதை உடனே வாபஸ் பெற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், பெங்களூருவைச் சேர்ந்த ‘கியூப்பா’ என்ற அமைப்பு சார்பில் ஜல்லிக்கட்டு சட்ட மசோதாவுக்கு எதிராக மனு தாக்கல் செய்திருப்பதாக தெரிகிறது. இந்த மனு வரும் 30-ம் தேதி விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in