ம.பி.யில் துப்பாக்கிச்சூட்டில் 5 விவசாயி பலியானதற்கு எதிர்ப்பு: மத்திய வேளாண் அமைச்சர் சென்ற கார் மீது காங்கிரஸார் முட்டை வீச்சு

ம.பி.யில் துப்பாக்கிச்சூட்டில் 5 விவசாயி பலியானதற்கு எதிர்ப்பு: மத்திய வேளாண் அமைச்சர் சென்ற கார் மீது காங்கிரஸார் முட்டை வீச்சு
Updated on
1 min read

மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் சென்ற கார் மீது, முட்டை வீசிய இளைஞர் காங்கிரஸார் 5 பேரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் ஜடானி பகுதியில், ‘சப்கா சாத் சப்கா பிகாஸ்’ என்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்க வந்திருந்த மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங், மாநில விருந்தினர் மாளிகையில் இருந்து காரில் கிளம்பினார். உடன் பாதுகாப்புக்கு போலீஸாரும் கார்களில் சென்றனர். சிறிது தூரம் சென்ற போது, அமைச்சர் ராதா மோகனுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸார் கறுப்பு கொடி காட்டினார்.

சிலர் அமைச்சர் சென்ற காரை நோக்கி முட்டைகளை வீசினர். எனினும், காருக்கு முன்னாள் முட்டைகள் விழுந்தன. மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்சார் மாவட்டத்தில் போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் சுட்டதில் 5 விவசாயிகள் பலியாயினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் கார் மீது இளைஞர் காங்கிரஸார் முட்டைகள் வீசியது விசாரணையில் தெரிய வந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் லோக்நாத் மகாரதி உட்பட இளைஞர் காங்கிரஸார் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று டிசிபி சத்தியபிரதமா பாய் தெரிவித்தார். போலீஸார் கைது செய்வதற்கு முன் லோக்நாத் கூறும்போது, ‘‘பாஜக ஆளும் ம.பி.யில் 5 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, வேளாண் துறை அமைச்சராக நீடிக்கும் தார்மீக உரிமை ராதா மோகனுக்கு இல்லை’’ என்றார்.

இதற்கிடையில், முட்டையை வீச்சு சம்பவத்துக்கு ஒடிசா பாஜக தலைவர் அருண் சிங் கூறும்போது, ‘‘ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தள அரசு தூண்டுதல் காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக சந்தேகிக்கிறேன். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது’’ என்றார்.

மற்றொரு பாஜக தலைவர் பிருகு பக்சிபத்ரா கூறும்போது, ‘‘மத்திய அமைச்சர் வருகையின் போது பாதுகாப்பு வழங்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு’’ என்று கண்டனம் தெரிவித்தார்.

மாநிலத்துக்கு மத்திய அமைச் சர் வரும்போது முட்டையை வீசி எதிர்ப்பு தெரிவிப்பதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத் துவிடாது என்று பாஜக.வினர் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in