

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பல்வேறு தரப்பினருடனும் ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக இன்று பெங்களூர் வருகிறார்.
மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு, தொகுதி பரிசீலனை, தேர்தல் அறிக்கை தயார் செய்தல், பொதுக்கூட்டம் என காங்கிரசும் பா.ஜ.க.வும் முழு வீச்சில் இறங்கி விட்டன.
இந்நிலையில், 2 நாள் பயணமாக கர்நாடகத்துக்கு வரும் ராகுல் காந்தி, இன்று காலை 10 மணிக்கு பெல்காமில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
கலந்துரையாடல்
அதன் பிறகு அங்கிருந்து தனி விமானம் மூலம் பெங்களூர் வரும் ராகுல் காந்தி சென்ட்ரல் கல்லூரியில் பல்வேறு கல்லூரி களைச் சேர்ந்த மாணவர்களுடன் கலந்துரையாடலில் பங்கேற்கிறார். அப்போது அரசிடமிருந்து மாணவர்கள் என்னென்ன எதிர்பார்க்கிறார்கள், தேர்தல் அறிக்கையில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களைக் கவர என்னென்ன நலத் திட்டங்களை உள்ளடக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.
அதன்பிறகு, பெங்களூர் அரசினர் மாளிகையில் இந்திய அளவில் சிறந்து விளங்கும் மூத்த பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாட உள்ளார். அப்போது வரும் நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்க்கொள்வது, காங்கிரஸின் சாதக பாதகங்களை அலசி ஆராய இருப்பதாகக் கூறப்படுகிறது.
சனிக்கிழமை இரவு கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரச்சாரம், தேர்தல் வியூகம் ஆகியவை குறித்து பேசுகிறார். ஞாயிற்றுக்கிழமை தும்கூரில் மாநிலம் முழுவதிலுமிருந்து வரும் பெண்களுடன் கலந்துரையாடுகிறார். அப்போது புதிய அரசிடம் பெண்கள் என்னென்ன நலத்திட்டங்களை எதிர்பார்க்கிறார்கள், தேர்தல் அறிக்கையில் பெண்களைக் கவர என்னென்ன புதிய திட்டங்களை உள்ளடக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட
உள்ளது.