Last Updated : 27 Jul, 2016 08:10 PM

 

Published : 27 Jul 2016 08:10 PM
Last Updated : 27 Jul 2016 08:10 PM

ஆம் ஆத்மி கட்சியை முற்றிலும் அழிக்க சதி நடக்கிறது: மோடி மீது கேஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், பிரதமர் மோடி மீது கடும் தாக்குதலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அரவிந்த் கேஜ்ரிவால் தனது பேஸ்புக் பக்கத்தில் சுமார் 9 நிமிட நேரம் நீடிக்கும் வீடியோவில் கூறியிருப்பதாவது:

மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி ஆம் ஆத்மி கட்சியை முற்றிலும் அழிக்கும் செயலில் தீவிரம் காட்டி வருகிறது. எனவே நம் கட்சித் தொண்டர்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் ஆகியோர்களுக்கு நான் கூற விரும்புவது என்னவெனில் இது நமக்கு மிகவும் இக்கட்டான காலக்கட்டம், நீங்கள் இது பற்றி சிந்தியுங்கள், உங்கள் குடும்பத்தினரிடம் பேசுங்கள். அவர்களது அடக்குமுறை வரும் நாட்களில் இன்னும் மோசமாகவே போகும் என்று நம்புகிறேன்.

எனவே அனைவரும் மனோபலத்துடன் இருப்பது அவசியம், முடியாதவர்கள் விலகிக்கொள்ளலாம். அவர் (மோடி) எந்த அளவுக்கு வேண்டுமானாலும் செல்வார். அவர் நம்மையெல்லாம் கொன்றாலும் கொன்று விடுவார். அவர் என்னையும் கொலை செய்தாலும் செய்வார். எனவே உங்கள் குடும்பத்தாரிடம் பேசுங்கள், எந்த வித தியாகத்துக்கும் தயாரா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எப்படியாவது சிறையில் தள்ளப்பட்டு விடுவார்கள்.

எனவே தயார் எனில் எங்களுடன் இருங்கள் இல்லையேல் பலவீனமானவர்கள் எனில் விலகி விடுங்கள்.

மோடி நிதானத்தில் இல்லை. அவர் ஆம் ஆத்மியை ஒழித்துக் கட்ட குறியாக இருக்கிறார். என்னைப் பொறுத்தவரையில் பெரிய கவலைக்கு காரணம் என்னவெனில் ஒரு நாட்டின் பிரதமர் கோபத்தில் முடிவுகளை எடுக்கத் தொடங்கி விட்டாரென்றால் நாடே அபாயத்திற்கு சென்று விடும். யாருக்குத் தெரியும் அவர் இதே போன்ற முடிவுகளை தொடர்ந்து எடுக்க மாட்டார் என்று.

முக்கியமான கேள்வி என்னவெனில் நாடு பாதுகாப்பான கரங்களில்தான் உள்ளதா என்பதே. எங்கள் எம்.எல்.ஏ.க்களை கைது செய்தது மட்டுமல்ல விஷயம், நாடு பாதுகாப்பான கரங்களில் இருக்கிறதா என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

ஆம் ஆத்மியை நசுக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை நீங்கள் பார்த்து வருகிறீர்கள். 10 எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் வீட்டில் வருமான வரி ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. லாப நோக்க இரட்டை பதவி புகாரில் 21 எம்.எல்.ஏ.க்களை தகுதி இழப்பு செய்யும் முயற்சியும் நடைபெற்றதை அறிவீர்கள்.

இது அடக்குமுறை சுழற்சி முறையாகும். ஏன் இப்படி நடக்க வேண்டும் என்று நான் ஆச்சரியப்படுகிறேன். நான் ஏன் மோடிஜியை கேள்விக்குட்படுத்துகிறேன் என்று மக்கள் கேட்கின்றனர். ஆனால் சிபிஐ, வருமான வரித்துறை மற்றும் பிற அமைப்புகள் தொடர்ந்து எங்கள் கட்சியினர் மீது ரெய்டு நடத்துவதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று நான் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். யாராவது ஒருவர் மூளையாக இதன் பின்னணியில் செயல்பட வேண்டும், யார் அவர்?

அமித் ஷா, மோடிஜி, பிரதமர் அலுவலகம் அனைவரும் ஒன்று கூடிவிட்டனர். மோடிஜியின் தூண்டுதலின் பேரில் ஷா இதனைச் செய்து வருகிறார், ஆனால் இவையெல்லாம் ஒரேயொரு அதிகார மையத்திலிருந்துதான் நடந்து வருகிறது.

உள்வட்டாரங்கள் என்ன கூறுகிறது எனில், மோடிஜி எங்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார், தர்க்கபூர்வமாக அவர் சிந்திக்கவில்லை என்கின்றனர். ஏனெனில் தினப்படி கைதுகள் அறிவுக்குகந்ததாக இல்லை. குறிப்பாக அனைவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர், ஒரு குற்றச்சாட்டைக் கூட நிரூபிக்க முடியவில்லை.

எங்களைக் கையாள்வதில் அவர் மூளையை உபயோகிப்பதில்லை. டெல்லியில் நல்லாட்சியை அவரால் ஜீரணிக்க முடியவில்லை என்று சிலர் கூறுகின்றனர். மற்றவர்களோ டெல்லியில் தோல்வியைக் கூறுகின்றனர், ஆனால் இன்னும் பலரோ, பஞ்சாப், கோவா, குஜராத்தில் எங்களுக்கு கிடைத்து வரும் ஆதரவு அவரது கோபத்துக்குக் காரணம் என்கின்றனர்.

நீங்கள் உங்கள் அரசு எந்திரத்தை எங்கள் மீது கட்டவிழ்த்து விடுகிறீர்கள். சிபிஐ, டெல்லி போலீஸ், ஊழல் தடுப்புக் கழகம் என்று எங்கள் எம்.எல்.ஏ..க்களை முடக்கப் பார்க்கிறீர்கள். ஆனால் மோடி அவர்களே நாங்கள் பயப்படவில்லை.

எங்கள் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளுக்கு எந்த வித அடிப்படையும் இல்லை. அவர்கள் ஓரிரு நாட்களில் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளனர்.

இவ்வாறு கடுமையாகப் பேசியுள்ளார் அரவிந்த் கேஜ்ரிவால்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x