

தேர்தலின்போது பாஜக, அகாலிதளம், காங்கிரஸ் கட்சிகள்தான் இந்த மடங்களில் ஆதரவு கோருவது வழக்கம். இம்முறை ஆம் ஆத்மி கட்சியும் இவர்களுடன் இணைந்துள்ளது.
பஞ்சாபில் 'டேராக்கள்' எனப்படும் ஆன்மீக மடங்கள் அதிகம் உள்ளன. இவற்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். எனவே பஞ்சாப் அரசியலில் இந்த மடங்கள்முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தற்போது பஞ்சாப் தேர்தல் பிரச்சாரம் தீவிரம் பெற்றுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் டேராக்களுக்கு சென்று வருகின்றனர். இதன் தலைவர்களை சந்தித்து, தங்களை ஆதரிக்கும்படி பக்தர்களை கேட்டுக்கொள்ளுமாறு கோரி வருகின்றனர். மத அடிப்படையில் வாக்கு கேட்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இந்த சந்திப்பு ரகசியமாக நடந்து வருகிறது.
தேர்தலின்போது பாஜக, அகாலிதளம், காங்கிரஸ் கட்சிகள்தான் இந்த மடங்களில் ஆதரவு கோருவது வழக்கம். இந்த முறை ஆம் ஆத்மி கட்சியும் இவர்களுடன் இணைந்துள்ளது.
பஞ்சாபின் டேராக்களில் 'டேரா சச்சா சவுதா' மடம்தான் மிகவும் பெரியது. இதன் தலைவர் குருமித் ராம் ரஹீம் சிங். இவருக்கு ஹரியாணா மற்றும் பஞ்சாபில் லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். இவர் நாயகனாக நடித்து 3 பஞ்சாபி மொழி படங்களும் வெளியாகின.
கடந்த ஹரியாணா தேர்தலின் போது பாஜகவை ராம் ரஹீம் சிங் ஆதரித்தார். தற்போது பஞ்சாப் தேர்தலிலும் பாஜகவை ஆதரிக்கும் அவர், அதன் கூட்டணிக் கட்சியான அகாலி தளத்துக்கு ஆதரவு அளிக்க மறுத்து விட்டார்.
அகாலிதளம் ஆட்சியில் ராம் ரஹீம் சிங் மீது பல கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதே இதற்கு காரணம் ஆகும். இதனால், ராம்ரஹீமை பாஜக தேர்தல் பொறுப்பாளர் கைலாஷ் விஜய் வர்கியா நேரில் சந்தித்து அகாலி தளத்துக்கும் ஆதரவு கேட்டுள்ளார். இதேபோல காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சித்தலைவர்களும் ராம் ரஹீமிடம் கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சச்சா சவுதாவுக்கு அடுத்த பலத்தில் சத்சங் எனும் பெயரில் பஞ்சாபின் பியாஸில் ஒரு டேரா உள்ளது. இதன் தலைவர், பஞ்சாபின் ஆளும் பாஜக-அகாலிதளம் அரசின் கேபினட் அமைச்சரான விக்ரம்சிங் மாஜீதியாவின் உறவினர் ஆவர்.
இதனால் சத்சங் டேராவின் ஆதரவு தமக்கு உறுதி என அகாலிதளம் கருதுகிறது. உ.பி. மதுராவின் பழம்பெரும்டேராவான ராதா சுவாமியின் கிளையும் பஞ்சாபில் உள்ளது. இந்த டேராவுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சில மாதங்களுக்கு முன் சென்று ஒருநாள் தங்கி வந்தார். இதனால் ராதா சுவாமி டேராவின் ஆதரவு தங்களுக்கே என காங்கிரஸ் கருதுகிறது.
பிஹாரில் பிறந்த அசுதோஷ் மஹராஜ் என்பவர் ஜலந்தர் மாவட்டத்தின் நூர்மஹாலில் ‘திவ்ய ஜோதி ஜாக்ரதிசன்ஸ்தான்’ எனும் டேரா நிறுவினார். இவர் கடந்த 2014, ஜனவரி 29-ம் தேதி நெஞ்சுவலியால் இறந்தார். இவரது இறப்பை மருத்துவர்கள் உறுதிசெய்த பின்னரும் அவரதுபக்தர்கள் நம்ப மறுத்தனர். ஆழ்நிலை தியானத்தில் அசுதோஷ் மகராஜ் ஒருநாள் உயிர்த்தெழுவார் என பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் கடந்த 2 வருடங்களாக உறை குளிரில் அவரது உடலை பாதுகாத்து வருகின்றனர். அசுதோஷ் மஹராஜ் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் சார்பில் விடப்பட்ட இரங்கல் செய்தி பின்னர் திரும்பப் பெறப்பட்டது. தேர்தல் ஆதாயம் கருதி காங்கிரஸ் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.
பஞ்சாபில் லட்சக்கணக்கான தலித்துகளும் டேராக்களின் பக்தர்களாக உள்ளனர். இதனால் தலித் தலைவரான மாயாவதியும் டேராக்களின் ஆதரவை எதிர்பார்க்கிறார். ஆம் ஆத்மி கட்சியும் ரகசியமாக பல டேராக்களுக்கு சென்றுவாக்கு கேட்டதாக கூறப்படுகிறது.