

டெல்லி உள்பட நாட்டின் பெருநகரங்கள் மற்றும் முக்கிய சுற்றுலா தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் இருக்கும் 400 ரயில்வே நிலையங்கள் தனியார் பங்களிப்புடன் மறுசீரமைக்கப்படும் என அத்துறையின் அமைச்சரான சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
மக்களவை நேற்று கூடியதும் கேள்வி நேரத்தின்போது இந்த தகவலை தெரிவித்த அவர், ஆர்வ முள்ள தனியார் துறை நிறுவனங் களிடம் இருந்து இதற்கான வடி வமைப்பு மற்றும் வணிக ரீதியான ஆலோசனைகள் கேட்கும் நட வடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்ப தாகவும் கூறினார்.
மேலும் அவர் பேசியதாவது:
நாட்டின் பெரு நகரங்கள் மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களில் அமைந்துள்ள ஏ-1 மற்றும் ஏ பிரிவைச் சேர்ந்த 400 ரயில்வே நிலையங்களை மறுசீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களிடம் இருந்து பிரீமியம் தொகை பெறுவதன் மூலம் ரயில்வே துறைக்கு வருவாயும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேம்படுத்தும் பணிகளுக்காக ஆதர்ஷ் ரயில்வே திட்டத்தின் கீழ் 1,253 ரயில்வே நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதேபோல் மாநில அரசுகளின் நெருக்கமான ஒத்துழைப்புடன் 2019-20ம் ஆண்டுக்குள் ரயில் பாதையை ஓட்டியுள்ள பகுதிகளிலும் காலியாக இருக்கும் ரயில்வே நிலங்களிலும் 5 கோடி மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது. மரங்களை நட்டு பராமரிப்பது முதல் தேவையற்ற மரங்களை வெட்டுவது வரை அனைத்து பணிகளிலும் மாநில அரசுகளின் வனத்துறையும் ஈடுபடுத்தப்படும்.
இதற்காக சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆலோசனையின் பேரில் மாநில வனத்துறை மற்றும் மண்டல ரயில்வே துறை இடையிலான மாதிரி ஒப்பந்தமும் தயார் செய்யப்பட்டுள்ளது. ஹரியாணா, பஞ்சாப், அசாம், கர்நாடகா மற்றும் மேற்குவங்க மாநிலத்தின் வனத்துறையுடன் அந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு சுரேஷ் பிரபு பேசினார்.