ஆதார் விவரம் சேகரிக்கும் பணியை தனியாரிடம் விடுவது நல்லதல்ல: உச்ச நீதிமன்றம் கருத்து

ஆதார் விவரம் சேகரிக்கும் பணியை தனியாரிடம் விடுவது நல்லதல்ல: உச்ச நீதிமன்றம் கருத்து
Updated on
1 min read

ஆதார் புள்ளி விவரங்களை சேகரிக்கும் பொறுப்பை தனியார் ஏஜென்சிகளிடம் விடுவது நல்ல யோசனை அல்ல என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஆதார் திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரபட்ட வழக்கு, தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு முன் வியாழனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் கூறும்போது, “ஆதார் தகவல்கள் சேகரிக்கும் பணி தனிநபர் அந்தரங்கம் தொடர்பானது என்பதால் இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும். ஆதார் புள்ளிவிவரம் சேகரிக்கும் பணியில் தனியார் ஏஜென்சிகள் ஈடுபட்டு வருகின்றன” என்றார்.

இதற்கு நீதிபதிகள், “இவ்வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்பதை ஏற்க இயலாது. என்றாலும் ஆதார் புள்ளி விவரங்கள் சேகரிக்கும் பொறுப்பை தனியாரிடம் விடுவது நல்ல யோசனை அல்ல” என்றனர்.

உச்ச நீதிமன்றம் கடந்த 2015, அக்டோபர் 15-ம் தேதி, ஆதார் தொடர்பான தனது கட்டுப்பாடுகளை விலக்கிக் கொண்டது. “அனைத்து ஓய்வூதியத் திட்டங்கள், வருங்கால வைப்பு நிதி, ஜன் தன் வங்கிக் கணக்கு, நூறுநாள் வேலை திட்டம், சமையல் எரிவாயு வினியோகம், பொது விநியோகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் கட்டாயப்படுத்தக் கூடாது” என்று கூறியது.

இந்த வழக்கில் நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும் வரை தாமாக முன்வந்து ஆதார் விவரம் தருவோரிடம் மட்டும் அந்த விவரம் பெறப்படும்” என்று அப்போது மத்திய அரசு உறுதி கூறியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in