வாஸ்து பூஜை செய்வதாக கூறி ரூ.1.3 கோடியை சுருட்டிய போலி சாமியாருக்கு 14 நாள் சிறை: ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவு

வாஸ்து பூஜை செய்வதாக கூறி ரூ.1.3 கோடியை சுருட்டிய போலி சாமியாருக்கு 14 நாள் சிறை: ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

ஹைதராபாத்தில் தொழிலதிபர் வீட்டில் வாஸ்து பூஜை செய்வதாக கூறி, மயக்க மருந்து கொடுத்து ரூ. 1.3 கோடியை சுருட்டிய போலி சாமியாரை 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சித்தூர் மாவட்டம் குப்பத்தை சேர்ந்தவர் சிவா எனும் சிவ பாபா. வாஸ்து குறைகளை பூஜைகள் மூலம் நீக்கி விடுவதாக தன்னை அணுகும் பக்தர்களிடம் தெரிவித்து வந்தார். அதை நம்பி ஹைதராபாத்தை சேர்ந்த மதுசூதன் ரெட்டி எனும் தொழிலதிபர் தனது வீட்டில் உள்ள வாஸ்து குறையை நீக்கும்படி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

அதன்படி மதுசூதன் ரெட்டியின் வீட்டுக்கு சென்ற சிவ பாபா, பிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து, அனைவரையும் மயக்கமடைய வைத்துள்ளார். பின்னர், வீட்டில் இருந்த 1.3 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

இது தொடர்பாக மதுசூதன் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீஸார், பெங்களூருவில் பதுங்கியிருந்த சிவபாபா, அவரது உதவியாளர்கள் தாமோதர், நிவாச ரெட்டி ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து ஹைதராபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூவரையும் 14 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து மூவரும் நேற்று சஞ்சல் கூடா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாகி உள்ள மோகன் ரெட்டி என்பவரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in