

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் இரு மாநிலங்களுக்கிடையே அரசியல் பிரச்சினை யாக மாறி வருவதால் அவரை பெங்களூர் சிறையில் இருந்து தமிழகத்துக்கு மாற்ற கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா கடந்த 27-ம் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியும், தண்டனையை ரத்து செய்யக் கோரியும் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெங்களூரில் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி அதிமுகவினரும், அவரது வழக்கறிஞர்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின்போது, “காவிரி பிரச்சினையில் பழிவாங்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.சிறையில் அவருக்கு எந்த உதவியும் செய்யாமல் அடைத்து வைத்திருக்கிறார்கள். மேலும் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்காமல் இழுத்தடித்து வருகிறார்கள்” என உணர்ச்சிப் பொங்க பேசினர். இதுமட்டுமில்லாமல் கர்நாடக அரசையும், நீதிபதி டி'குன்ஹாவையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
கடந்த 30-ம் தேதி ஜெயலலிதாவின் ஜாமீன் மனு ஒத்தி வைக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த அதிமுக வழக்கறிஞர்கள் கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது நீதிபதி ரத்னகலாவை கடுமையாக விமர்சித்தும், கர்நாடக அரசைக் கண்டித்தும் கன்னட தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்தனர்.
உளவுத் துறை எச்சரிக்கை
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் தொடர்ந்து இருந்தால் கர்நாடகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சில கன்னட அமைப்பு களும் ஜெயலலிதாவை கேலி செய்யும் தொணியில் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. சில இடங்களில் இது இரு மாநிலத்தவர்களுக்கிடையே கலவரமாக உருவெடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது என உளவுதுறை எச்சரித்து உள்ளது.
கர்நாடக அரசு திட்டம்?
இதுதொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, உள் துறை அமைச்சர் ஜார்ஜ் மற்றும் சட்டத் துறை அமைச்சர் ஜெயசந்திரா ஆகியோருடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றுவது குறித்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏதேனும் சட்ட சிக்கல் எழுமா, அதனை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் அவர்கள் விவாதித்துள்ளனர். ஆனால் இது தொடர்பாக சித்தராமையா ஊடகங்களுக்கு தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விவகாரம் குறித்து கர்நாடக அமைச்சர் ஒருவர் பேசும்போது, “ஜெயலலிதா விவகாரம் மிகவும் உணர்ச்சிகரமாக பார்க்கப்படுகிறது.
அவர் பெங்களூர் சிறையில் இருப்பதால் அதிமுக அமைச்சர்களும், வழக்கறிஞர்களும், தொண்டர்களும் வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்குவது போலீஸாருக்கு கடினமாக உள்ளது.
அதுமட்டுமல்லாமல் அதிமுக வழக் கறிஞர்கள் மற்றும் தொண்டர்கள் போராட் டங்களின் போது கர்நாடக அரசுக்கு எதிராக வும், நீதிபதிக்கு எதிராகவும், கன்னட மக்களுக்கு எதிராகவும் அனுமதி பெறாமல் போராட்டங்களை நடத்துகின்றனர். இதனால் கடந்த ஒரு வாரத்தில் பொது அமைதியும், சட்டம் ஒழுங்கும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பெங்களூரில் தமிழர்கள் வாழக்கூடிய பகுதிகளில் ஒருவித பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.
ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப் பட்டதிலும், ஜாமீன் மனு விசாரணையில் தாமதம் ஏற்பட்டதிலும் கர்நாடக அரசுக்கு துளியும் தொடர்பில்லை. இருப்பினும் அவருடைய கட்சியினர் கர்நாடக அரசை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த விவகாரத்தில் எங்களுக்கு அவப்பெயர் ஏற்படுவதை ஏற்கமுடியாது. அசம்பாவித சம்பவங்கள் ஏற்படக்கூடாது என்பதால் ஜெயலலிதாவை தமிழகத்துக்கு மாற்ற திட்டமிட்டுள்ளோம். இதற்காக சட்ட ரீதியாக மேற்கொள்ள வேண்டிய சட்டப்பணிகள் குறித்தும், மத்திய அரசை அணுகுவது குறித்தும் ஆலோசித்து வருகின்றோம்”என்றார்.
தேவே கவுடா கருத்து
இது தொடர்பாக முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவே கவுடாவிடம் 'தி இந்து' சார்பாக பேசினோம். அவர் கூறியதாவது:
ஜெயலலிதா பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது அவருடைய தனிப்பட்ட வழக்கு. ஆனால் இதில் கர்நாடகாவை சிலர் வம்புக்கு இழுக்கிறார்கள். பல இடங்களில் போராட்டங்கள் நடப்பதாக ஊடகங்களில் பார்க்கிறேன். இதனால் பெங்களூரில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் பெங்களூர் போலீஸார் வேறு பணிகளில் ஈடுபட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சினையால் கர்நாடகத்திற்கும் தமிழகத்திற்கும் இடையே இருக்கும் நல்லிணக்கமும், நட்புறவும் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. எனவே ஜெயலலிதாவின் வழக்கை பெங்களூருக்கு மாற்றிய உச்சநீதிமன்றம், இது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும். தமிழக சிறைக்கு மாற்றப்படுவதால் எவ்வித சட்டச் சிக்கலும் ஏற்படாது என நினைக்கிறேன்” என்றார்.