

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதரவான சட்டத்தை நிராகரிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் பாஜக தலைவர்கள் நேரில் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, அவசரச் சட்டம் தொடர்பாக விளக்கம் அளிக்க, மத்திய அமைச்சர்கள் ஷிண்டே மற்றும் சிபல் ஆகியோரை குடியரசுத் தலைவர் அழைத்துள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, பாரதிய ஜனதா கட்சியி்ன் மூத்த தலைவர்கள் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி ஆகியோர் வியாழக்கிழமை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில், குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதரவான சட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்தச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அத்வானி, “அரசியலை குற்றமயமாக்குதலும், குற்றவாளிகளை அரசியலில் அனுமதித்தலும் இந்திய ஜனநாயகத்தில் கவலை அளிக்கக் கூடிய ஒரு விஷயமாகும். இது குறித்த ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் 2 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் பதவிகள் உடனடியாகப் பறிக்கப்பட வேண்டும் என கடந்த ஜூலை 10-ல் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்க்கும் வகையில், கிரிமினல் அரசியல்வாதிகளை காப்பாற்றும் முயற்சியாக அரசு ஓர் அவசர சட்டம் கொண்டு வர முயல்வது சட்டத்திற்கு முரணானது என்பதை குடியரசுத் தலைவரிடம் எடுத்துக் கூறினோம்” என்றார்.
சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில், “புதிய சட்டத்தின்படி தண்டணை அளிக்கப்பட்ட ஒருவர் வாக்கு அளிக்க முடியாது எனவும், தனது ஊதியத்தை பெறவும் முடியாது எனவும் இருக்கும் போது அவர் ஏன் உறுப்பினராக தொடர வேண்டும்?
பொதுவாக, தண்டணை அளிக்கப்பட்டவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இந்த அவசர சட்டத்தில் அவர்கள் 90 நாட்களுக்குள் செய்யும் மேல் முறையீட்டின் தீர்ப்பு வரும் வரை அவர்கள் பதவியில் தொடரலாம் என இருக்கிறது” என்றார்.
இந்தச் சந்திப்புக்குப் பின், இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே மற்றும் சட்ட அமைச்சர் கபில் சிபல் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். அவர்கள் இருவரும் உரிய விளக்கத்தை அளிப்பார்கள் எனத் தெரிகிறது.