

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரர் ஒருவர் சக வீரர்கள் 5 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.
காஷ்மீர் மாநிலம் வடக்கு பகுதியில் இருக்கும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் ஒன்றில், இன்று அதிகாலை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவர் சக வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.
இதில் சம்பவ இடத்திலேயே ராணுவ இளநிலை அதிகாரி உள்பட 5 வீரர்கள் பலியாகினர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த திடீர் தாக்குதலில் ஈடுபட்ட ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சக வீரர்களை கொலை செய்வது ஏன்?
இந்திய ராணுவப் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் சிலர் சக வீரர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துவது கடந்த 24 ஆண்டுகளில் பல முறை நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
ராணுவ வீரர்கள் மன உளைச்சலுடன் பணியில் ஈடுபடுவது, குடும்பத்தாரை நீண்ட நாட்களாக பிரிந்திருப்பது, போதிய ஓய்வின்மை ஆகியவற்றால் ஏற்படும் மன அழுத்தமே வெறிச் செயல்களைத் தூண்டுவதாக உளவியல் ஆய்வில் கூறப்படுகிறது.
இத்தகைய நெருக்கடியை சமாளிக்க அலோசகர்கள் பல்வேறு வழி முறைகளை ராணுவத்திற்கு பரிந்துரைத்துள்ளனர். சரியான இடைவெளியில் ராணுவ வீரர்களுக்கு விடுமுறை அளிப்பது, ராணுவ வீரர்கள் கட்டுப்பாடு விதிமுறைகளில் சீர்திருத்தம் மேற்கொள்வது ஆகியன இவற்றில் அடங்கும்.