

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்தன் துவிவேதி நேற்று கூறும்போது, “மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கபில் சிபலுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கட்சி எம்எல்ஏக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஆனால் 6 எம்எல்ஏக்கள் கொறடா உத்தரவை மீறி வேறு கட்சிக்கு வாக்களித்துள்ளனர். எனினும் பிற கட்சி உறுப்பினர் களின் ஆதரவுடன் கபில் சிபல் வெற்றி பெற்றார். கட்சி மாறி வாக் களித்தவர்களை கட்சியிலிருந்து நீக்கி உள்ளோம். இது உடனடியாக அமலுக்கு வருகிறது” என்றார்.
57 மாநிலங்களவை உறுப்பினர் களின் பதவிக் காலம் இந்த மாதத் துடன் முடிவடைகிறது. இதை யடுத்து புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 30 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
27 இடங்களுக்கு கடந்த 11-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்று அன்றைய தினமே முடிவு அறிவிக் கப்பட்டது. இதில் பாஜக 12, காங்கிரஸ் 6, சமாஜ்வாடி 7, பகுஜன் சமாஜ் 2 இடங்களில் வெற்றி பெற்றன.
எனினும் இந்தத் தேர்தலில் பல மாநிலங்களில் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, கர்நாடகா வில் 8 மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள், உ.பி.யில் ஒரு பாஜக எம்எல்ஏவை கட்சித் தலைமை ஏற்கெனவே இடைநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.