

இறைச்சிகாக மாடுகளைச் சந்தைகளில் விற்கத் தடை விதித்து மத்திய அரசு விடுத்திருந்த அறிவிப்பாணை குறித்து மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்த 2 மனுக்களை இன்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் அடுத்த விசாரணையை ஜூலை 11-ம் தேதிக்குத் தள்ளி வைத்தது.
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ்.நரசிம்மா, நீதிபதிகளிடம் தெரிவிக்கும் போது நாடு முழுதும் கால்நடை விற்பனையை ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டு வருவதே அரசு அறிவிப்பாணையின் நோக்கம் என்று கூறியதோடு, சென்னை உயர் நீதிமன்றம் அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்ததையும் சுட்டிக்காட்டினார்.
இரண்டு மனுக்களில் ஒரு மனுவில், அரசு அறிவிப்பாணையின் சில பிரிவுகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என்று கூறியதோடு, மதச்சுதந்திரம் மற்றும் மனசாட்சி சுதந்திரம், வாழ்வாதாரத்திற்கான உரிமை ஆகியவற்றையும் முடக்குவதாக குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் 2 வாரங்களுக்குள் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டதோடு விசாரனையை ஜூலை 11ம் தேதிக்குத் தள்ளிவைத்தது.
தடை உத்தரவு விவகாரங்களை நேர்மையாக அணுகுவோம்: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
இறைச்சிக்காக சந்தைகளில் கால்நடைகளை விற்க வாங்கவும் தடை விதிக்கப்பட்ட அறிவிப்பாணை குறித்த விவகாரங்களை ‘பொறுப்புடனும், நேர்மையுடனும்’ அணுகுவோம் என்றார் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.
“உச்ச நீதிமன்றம் எங்களுக்கு ஜூலை 11-ம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. ஆனால் அதற்கு முன்னரே நாங்கள் பதில் அனுப்பி விடுவோம்.
நாங்கள் ஏற்கெனவே கூறியபடி இது தொடர்பாக கவலை ஏற்பட்டுள்ளவர்களுக்கு பொறுப்புடனும், நேர்மையாகவும் பதில் அளிப்போம், இதனால் பாதிக்கப்பட்ட எந்த ஒருவரையும் அரசு சந்தித்துப் பேசும்” என்றார் ஹர்ஷ் வர்தன்.