

சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் ஏர் இந்தியா விமான ஊழியரை காலணியால் அடித்த சம்பவத்தை அடுத்து அவர் பயணம் செய்ய ஏர் இந்தியா மட்டுமல்ல மேலும் 4 உள்நாட்டு விமான சேவை நிறுவனங்கள் தடை விதித்தன.
“ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் கூட்டமைப்பின் உறுப்பினர்களான இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ்ஜெட், கோ ஏர் ஆகிய நிறுவனங்கள் ஏர் இந்தியா ஊழியர் தாக்கப்பட்ட விவகாரத்தை வன்மையாகக் கண்டிக்கிறது.
எங்கள் ஊழியர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எங்கள் அனைவரின் மீதான, நாட்டில் சட்டத்திற்கு இணங்கி வாழ்வாதாரத்திற்கு கடினமாக உழைக்கும் சாமானியர்கள் மீதான தாக்குதலாகப் பார்க்கிறோம்.
எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதியும் ஊழியர்கள் மன உறுதியை தக்கவைக்கவும் கடுமையான நடவடிக்கை தேவை என்று உணர்கிறோம். ஆகவே எங்கள் சக ஊழியர்கள் மற்றும் பிற வாடிக்கையாளர்கள் நலன்களையும் பாதுகாப்பையும் கருதி ’நோ-ஃபிளை’ பட்டியலை வெளியிடுகிறோம், இதில் மோசமாக நடக்கும் பிற பயணிகளும் இடம்பெறுவார்கள். இத்தகைய வாடிக்கையாளர்கள் எங்கள் விமானத்தில் பயணம் செய்வதை நாங்கள் வரவேற்கவில்லை. எனவே தடை செய்யப்படும் பயணிகள் பட்டியலை உருவாக்க அரசும், பாதுகாப்பு முகமைகளும் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் ஆகிய விமான சேவை நிறுவனங்களும் தங்கள் அறிக்கையில் கண்டனம் தெரிவித்து கெய்க்வாட் பயணம் செய்ய தடை விதித்துள்ளது.
நேற்று, வியாழக்கிழமையன்று ஏர் இந்தியா ஊழியர் ஆர்.சுகுமார் என்பவரை சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் தாக்கியதாக பரபரப்பு ஏற்பட்டது. விமானம் டெல்லி வந்திறங்கிய பிறகு இவர் மீது கெய்க்வாட் காலணியால் தாக்கியதாக செய்திகள் வெளியாகின. கெய்க்வாட் ஓபன் டிக்கெட்தான் வைத்திருந்ததாகவும், அனைத்து இருக்கைகளுமே இகானமி கிளாஸ்தான் எனும்போது பிசினஸ் கிளாஸ் கொடுக்கவில்லை என்று தகராறில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.
இதனையடுத்து ஊழியரை ‘25 முறை செருப்பால் அடித்தேன்’ என்று ரவீந்திர கெய்க்வாட் ஒப்புக்கொண்டார். சுகுமார் டெல்லி போலீஸிடம் புகார் கொடுத்தார். இதனையடுத்து எஃப்.ஐ.ஆர் பதியும் முன்பு எம்.பி.என்பதால் சட்ட ஆலோசனை பெற அனுப்பப்பட்டுள்ளது.