

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அவரது விடுதி அறையில் சனிக்கிழமை காலை 4.30 மணியளவில் தற்கொலை செய்துகொண்டார்.
இது தொடர்பாக கச்சிபோலி காவல் ஆய்வாளர் ரமேஷ் கூறும்போது, "ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார் பிரவீன். இந்நிலையில் சனிக்கிழமை காலை விடுதியில் எல் பிளாக்கில் உள்ள அறை எண் 203-ல் அவர் தூக்கில் தொங்கியடி இருந்தார்.
இது தொடர்பாக சக மாணவர்கள் விடுதி மருத்துவ அலுவலகத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்த மருத்துவர் உடனடியாக விரைந்து பிரவீனை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரவீன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர்.
பிரவீன் இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் கல்லூரியில் சேர்ந்துள்ளார். முதலாம் ஆண்டு எம்.எஃப்.ஏ. பயின்று வந்தார். பிரவீன் தற்கொலை குறிப்பு ஏதும் விட்டுச் செல்லவில்லை. எனவே அவர் சாவுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை" என்றார்.
பிரவீன் மகபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த சத்நகரைச் சேர்ந்தவர்.
கடந்த ஜனவரி 17-ம் தேதி ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை செய்து கொண்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.