

தெற்கு டெல்லியில் ஓடும் காரில் 25 வயது கொண்ட இளம் பெண் ஒருவர் 3 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
தெற்கு டெல்லி வசந்த விஹார் பகுதியில் உள்ள மல்டிபிளக்ஸ் அருகே அப்பெண் கடத்தப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில், "தெற்கு டெல்லி வசந்த விஹார் பகுதியில் உள்ள மல்டிபிளக்ஸ் அருகே வியாழக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் இளம் பெண் ஒருவர் அவரது தோழியுடன் சாலையோர நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர்கள் அருகே வேகமாக கார் ஒன்று வந்தது. அதிலிருந்தவர்கள் ஒரு பெண்ணை மட்டும் உள்ளே இழுத்துக் கொண்டு மற்றொருவரை கீழே தள்ளிச் சென்றுள்ளனர்.
கீழே விழுந்த அந்தப் பெண் காரில் பதிவெண்ணை குறித்துக் கொண்டு போலீஸில் புகார் அளித்தார். உடனடியாக போலீஸார் ஆங்காங்கே வாகனச் சோதனையை முடுக்கிவிட்டனர். அப்போது கீதா காலனி அருகே அந்தப் பெண் சொன்ன கார் பிடிபட்டது. காரை போலீஸார் சோதனை செய்தனர் ஆனால் காரில் அப்பெண் இல்லை.
இதனையடுத்து காரில் இருந்த மூவரை மட்டுமே போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண் அவரது தோழிக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். தான் பூர்வி மார்க் பகுதியில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். உடனடியாக அப்பகுதிக்கு மருத்துவக் குழு விரைந்து சென்றது. அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். பிடிபட்ட மூவர் மீதும் கடத்தல் மற்றும் கூட்டு பலாத்காரம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.