

நைஜீரிய மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வரும் 5-ம் தேதி மக்களவையில் விளக்கம் அளிப்பார் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த குமார் தெரிவித்தார்.
டெல்லி அருகேயுள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் 4 நைஜீரிய மாணவர்களை ஒரு கும்பல் அண்மையில் தாக்கியது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து 5 பேரை கைது செய்துள்ளனர். 2 பேரை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் விசாரணை முடிந்த பிறகே உண்மை தெரியவரும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.
இந்நிலையில் இவ்விவகாரத்தை காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் வெள்ளிக்கிழமை எழுப்பினர். அதற்கு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த குமார் பதில் அளித்தார். அவர் கூறியபோது, நைஜீரிய மாணவர்கள் தாக்கப்பட்டது துரதிஷ்டவசமானது. இந்த சம்பவம் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வரும் 5-ம் தேதி மக்களவையில் விரிவான விளக்கம் அளிப்பார் என்று தெரிவித்தார்.