

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 12 எம்எல்ஏக்கள் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதில் ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள் 5 பேர் கட்சி மாறி எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடுவதால் அங்கு ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு கவிழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைமையிலான கூட்டணி ஆட்சியில் உள்ளது.
ஜேஎம்எம் தலைவரும் முன்னாள் முதல்வருமான சிபு சோரனின் மகன் ஹேமந்த் சோரன் முதல்வராக இருக்கிறார். 81 உறுப்பினர்கள் கொண்ட மாநில சட்டமன்றத்தில் ஹேமந்துக்கு 43 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. இந்நிலையில், ஆளும் ஜேஎம்எம் கட்சியின் எம்எல்ஏக்களான பித்யூத் மாரன் மஹ்தோ, ஹேம்லால் முர்மு ஆகிய இருவரும் பாஜகவில் சேர்ந்தனர். இவர்கள் இருவரும் அக்கட்சி சார்பில் மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோல் காங்கிரஸ் எம்எல்ஏ ததாய் துபே எனும் சந்திரசேகர், ஆளும் கூட்டணி ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் பந்து திர்கி, சம்ரா லிண்டா ஆகிய மூவரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குத் தாவிவிட்டனர். இவர்களும் அக்கட்சி சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த 5 பேர் தவிர ஜேஎம்எம் எம்எல்ஏ ஜெகந்நாத் மஹ்தோ, காங்கிரஸ் எம்எல்ஏ கௌரவ் நாரயண் சிங் ஆகியோரும் தங்கள் கட்சிகளின் ஒப்புதலுடன் மக்களவை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இவர்களுடன் எதிர்க்கட்சி வரிசையில், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா எம்எல்ஏ பிரதீப் யாதவ், மதுகோடாவின் மனைவியும் சுயேச்சை உறுப்பினருமான கீதா கோடா உள்ளிட்ட 5 பேர் மக்களவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள் 5 பேர், வரும் தேர்தலில் கட்சி மாறி போட்டியிடுவதை குறிப்பிட்டு, ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சாவின் தலைவரான பாபுலால் மராண்டி, மாநில ஆளுநர் சையது அகமதுவிடம் கடிதம் அளித்துள்ளார். அவர் தனது கடிதத்தில் ஆட்சியை கலைத்து உத்தரவிடும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு கவிழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.