வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு: மாயாவதி குற்றச்சாட்டு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு: மாயாவதி குற்றச்சாட்டு
Updated on
1 min read

வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கே ஓட்டு விழும் வகையில் மோசடி செய்து அந்த கட்சி வெற்றியைப் பறித்துள்ளது என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் மாயாவதி யின் பகுஜன் சமாஜ் கட்சி படு தோல்வி அடைந்துள்ளது. பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி லக்னோவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி தருவதாக உள்ளது. வாக்கு எண்ணு வதை தேர்தல் ஆணையம் நிறுத்திவிட்டு முடிவு அறிவிப்பதை யும் கிடப்பில் போட வேண்டும். வழக்கமாக பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டு முறையில் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும்.

இப்போதைய போக்கினை கவனிக்கும்போது அது ஜனநாயகத்துக்கு மோசமான பாதிப்பை விளைவிக்கும். ஜனநாயகத்தை அடியோடு நசுக்கிவிடும். உத்தரப் பிரதேசம், உத்தராகண்டின் தேர்தல் முடிவுகள் வியப்பூட்டுகிறது. யாரும் இதை ஏற்கமாட்டார்கள்.

பாஜகவை தவிர வேறு எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் அதை ஏற்காத வகையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்து உள்ளதாகவே தெரிகிறது. இதேபோன்ற குற்றச்சாட்டு 2014-ல் நடந்த மக்களவைத் தேர்தலின் போதும் பகுஜன் சமாஜ் சார்பில் முன்வைக்கப்பட்டது. ஆனால் மோடி அலை காரணமாகவும் காங்கிரஸ் மீதான வெறுப்பாலும் முடிவு மாறியதாக அப்போது அமைதி காத்தேன்.

முஸ்லிம்கள் கணிசமாக உள்ள பகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்பதை ஏற்கவே முடியவில்லை. முஸ்லிம்கள் அதிகம் வாழும் இடங்களிலும் பாஜகவுக்கு ஆதரவாகவே முடிவு வெளியாகி உள்ளது. எனவே தேர்தல் முடிவுகள் அறிவிப்பதை நிறுத்திவிட்டு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும். அதில் வாக்குச் சீட்டு முறையை பயன்படுத்தும்படி கோரி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மாயாவதிக்கு ஆணையம் பதில்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்யப்பட்டிருப்பதாக மாயாவதி கூறிய புகாரை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

இதுதொடர்பாக ஆணையம் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த மோசடியும் செய்ய முடியாது. வாக்குச்சீட்டு மூலம் மறுதேர்தல் நடத்துவது சாத்தியமற்றது. உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட்டில் வாக்குப் பதிவு நடைமுறைகள் அனைத்தும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், பிரதிநிதிகள் முன்னிலையில்தான் நடைபெற்றன. இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in