

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா அமித் ஷா முன்னிலையில் நாளை பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் மண்டியாவை சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா (84) கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக விளங்கினார். கடந்த 1968-ம் ஆண்டு மண்டியா மக்களவை தொகுதியில் வெற்றிப் பெற்று முதல்முறையாக எம்பியான இவர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்துள் ளார். கடந்த 1999-ம் ஆண்டு கர்நாடக முதல்வராக எஸ்.எம்.கிருஷ்ணா பொறுப்பேற்றார்.
கடந்த சில ஆண்டுகளாக கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா, கடந்த ஜனவரி 28-ம் தேதி காங்கிரஸில் இருந்து விலகுவதாக அறிவித்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், முதல்வர் சித்தராமையாவும் தன்னை அலட்சியப்படுத்தியதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து, கிருஷ்ணாவைச் சந்தித்த கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா, பாஜக வில் இணையுமாறு வலியுறுத்தி னார். அப்போது பாஜகவில் இணைந்தால் குடியரசுத் துணைத் தலைவர், ஆளுநர் உள்ளிட்ட பதவிகளை வழங்குவதாகவும் உறுதி அளித்தார்.
இதையடுத்து, கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோருடன் எஸ்.எம்.கிருஷ்ணா தொலைபேசி மூலம் பேசினார். அப்போது இரு வரும் அவரை டெல்லி வருமாறு அழைப்பு விடுத்தனர். எனவே எஸ்.எம்.கிருஷ்ணா சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் மலை மாதேஸ்வரா கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.
இன்று டெல்லிக்கு செல்லும் எஸ்.எம்.கிருஷ்ணா, நாளை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசுகிறார். இதையடுத்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் நாளை மாலை அல்லது நாளை மறுநாள் பாஜகவில் இணைகிறார். மூத்த காங்கிரஸ் தலைவரான எஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவில் இணை வதால் அவரது ஆதரவாளர்களும், முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகளும் பாஜகவில் இணைய திட்டமிட்டுள் ளனர். இதனால் கர்நாடக அரசிய லில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.