

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக் மற்றும் அவரது தொண்டு நிறுவனத்துக்கு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் (பிஎம்எல்ஏ) அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, “ஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ய அமலாக்கத் துறை விரும்புகிறது. எனவே, இந்த மாத இறுதியில் நேரில் ஆஜராக வேண்டும் என்று வெளிநாட்டில் தங்கி உள்ள அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுபோல அவரது தொண்டு நிறுவனத்துக்கும் தனியாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.
சட்ட விரோத செயலில் ஈடுபடுவதாக புகார் எழுந்ததையடுத்து, ஜாகிர் நாயக் மற்றும் அவருக்கு சொந்தமான இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன் (ஐஆர்எப்) மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கடந்த மாதம் வழக்கு பதிவு செய்தது.
இதுபோல, சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக ஜாகிர் மற்றும் ஐஆர்எப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து பல்வேறு ஆவணங்களை திரட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.