

பிஹாரில் பத்திரிகையாளர் கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளி ஒருவருடன் ராஷ்ட்ரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவர் லாலுவின் மூத்த மகனும், அம்மாநில சுகாதார அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிஹாரின் சிவான் நகரில் இந்த ஆண்டு மே 9-ம் தேதி ஹிந்தி பத்திரிகையாளர் ராஜ்தியோ ரஞ்சன் கொல்லப்பட்ட வழக்கில், முகம்மது கைப், முகம்மது ஜாவேத் ஆகியோர் தேடப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாகல்பூர் சிறையில் இருந்து ஆர்ஜேடி மூத்த தலைவர் முகம்மது சகாபுதீன் கடந்த 10-ம் தேதி விடுவிக்கப்பட்ட பிறகு, அவருடன் முகம்மது கைப், முகம்மது ஜாவேத் ஆகியோர் இருப்பது போன்ற புகைப்படம் மற்றும் வீடியோ நேற்று முன்தினம் வெளியானது. மேலும் இதே படக்காட்சியில் முகம்மது கைப் உடன் அமைச்சர் தேஜ் பிரதாப் இருப்பது போன்ற படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆக பரவி வருகிறது. இதனால் பிஹார் அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் முகம்மது கைப் தன்னுடன் இருந்தது தனக்குத் தெரியாது என அமைச்சர் தேஜ் பிரதாப் கூறியுள்ளார். இது தொடர் பாக அவர் கூறும்போது, “எனது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக் கானோர் தினமும் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள் கின்றனர். ஒவ்வொருவரின் பின்னணியையும் என்னால் அறிய இயலாது” என்றார்.
இதனிடையே சகாபுதீனுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் அளித்த ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய நிதிஷ்குமார் அரசு முடிவு செய்துள்ளது.