

டெல்லி கிரிக்கெட் சங்கத் (டிடிசிஏ) தலைவராக இருந்தபோது, யாரிடமிருந்தும் பணம் வாங்கவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி டெல்லி நீதிமன்றத்தில் செவ்வாயன்று தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
டெல்லி தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 21-ம் தேதி, அருண் ஜேட்லி குற்ற அவதூறு வழக்கு தொடர்ந்தார். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த கேஜ்ரிவால், குமார் விஸ்வாஸ், அஷுடோஷ், சஞ்சய் சிங், ராகவ் சத்தா மற்றும் தீபக் வாஜ்பாய் ஆகியோர் தனது புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சஞ்சய் கனக்வால் முன்னலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மிகுந்து பாதுகாப்புக்கு நடுவே நேரில் ஆஜரான அருண் ஜேட்லி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
அப்போது அவர் கூறும்போது, “நான் டிடிசிஏ தலைவராக இருந்தபோது பெரோஷ் ஷா கோட்லா விளையாட்டு மைதானம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது நான் பணம் வாங்கியதாக கேஜ்ரிவால் உள்ளிட்ட 6 பேர் என் மீதும் எனது குடும்பத்தினர் மீதும் குற்றம்சாட்டி உள்ளனர். இவை பொய்யான மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகள் ஆகும். இந்த விவகாரத்தில் நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை.
டிடிசிஏ இயக்குநர்கள் வாரியம் நியமித்த குழுதான் இந்தப் பணியை கண்காணித்தது. கேஜ்ரிவாலின் முதன்மை செயலாளருக்கு எதிராக நடத்தப்பட்ட சிபிஐ சோதனையை திசை திருப்பும் வகையில் இந்த குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர்” என்றார்.
டெல்லி முதல்வர் அலுவலகத்தில் கடந்த மாதம் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். முதல்வரின் முதன்மைச் செயலாளர் மீதான ஊழல் புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெறுவதாக சிபிஐ தெரிவித்தது. எனினும், அருண் ஜேட்லி டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோது நடைபெற்ற ஊழல் தொடர்பாக கோப்புகளை கைப்பற்றுவதற்காகவே இந்த சோதனை நடத்தப்பட்டதாக கேஜ்ரிவால் உள்ளிட்டோர் புகார் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.