

இந்தத் தேசத்தில் ஒரே ஒரு குரலுக்குதான் மதிப்பு இருக்கிறது என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
அவர் மேலும் கூறும்போது"பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகாரியும் இல்லை, மதவாதியும் இல்லை. இது இந்த தேச மக்கள் அனைவருக்கும் தெரியும். இல்லை என்றால், இவ்வளவு பெரிய மகத்தான தேர்தல் வெற்றியை மக்கள் தந்திருக்கமாட்டார்கள்" என்றார்.
மக்களவையில் எதிர்கட்சியினர் விவாதத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார் எனவும் ராகுல் குற்றம்சாட்டியுள்ளது குறித்த கேள்விக்கு: "இது அவை நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட. இது தொடர்பாக ஏதாவது நடவடிக்கை தேவைப்பட்டால் அதை சபாநாயகர் கவனித்துக் கொள்வார்" என தெரிவித்தார்.
இதற்கிடையில், தான் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக ராகுல் காந்தி கூறியுள்ள குற்றச்சாட்டினை மறுத்துள்ள சுமித்ரா மஹாஜன் மக்களவையில் அனைத்து உறுப்பினர்களுக்கும் சமவாய்ப்பு அளிக்கப்படுவதாக விளக்கமளித்துள்ளார்.
முன்னதாக இன்று காலை, மக்களவையில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அதிகரித்து வரும் மத வன்முறைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து ராகுல் காந்தி சபாநாயகர் மீதும் பிரதமர் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.