Last Updated : 02 May, 2017 10:32 AM

 

Published : 02 May 2017 10:32 AM
Last Updated : 02 May 2017 10:32 AM

துருக்கி-இந்தியா இடையே 3 ஒப்பந்தம் கையெழுத்து: தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்போர் மீது கடும் நடவடிக்கை - அதிபர் எர்டொகன் பிரதமர் மோடி சந்திப்பில் உறுதி

துருக்கி அதிபர் ரிசப் தய்யிப் எர்டொகன் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். இந்நிலையில் பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் எர்டொகன் நேற்று சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது, பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் நிலவும் இருதரப்பு உறவுகளை மறு ஆய்வு செய்தனர். தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் இருதரப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துவது மற்றும் அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் உறுப்பினராக இணைய வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விவாதித்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கிடையே, 3 ஒப்பந்தங் கள் கையெழுத்தாயின. பின்னர் இருதலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தல், நாம் அனைவரும் கவலைப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. இதுகுறித்து துருக்கி அதிபரிடம் விரிவாக ஆலோசனை நடத்தினேன். எந்த ஒரு நோக்கம் அல்லது இலக்கு அல்லது காரணத்துக்காகவும் தீவிரவாதத்தை அங்கீகரிக்கக் கூடாது என நாங்கள் ஒப்புக் கொண்டோம்.

மேலும் தீவிரவாத இயக்கங் களை ஒடுக்கவும், அவற்றுக்கு கிடைக்கும் நிதி ஆதாரங்களை தடுக்கவும், எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஒடுக்கவும் உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும். அத்துடன் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பவர்கள் மற்றும் அடைக்கலம் கொடுப்பவர்கள் (பாகிஸ்தான்) மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, உலகம் முழுவதும் தீவிரவாதத்தை வேரறுப்பதற்காக, இருதரப்பு மற்றும் பல நாடுகளின் ஒத்துழைப்பை பலப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளோம்.

மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு பொருளாதார சீர்திருத் தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்போது உலகில் வேகமாக வளரும் நாடாக இந்தியா உரு வெடுத்துள்ளது. இங்கு முதலீடு செய்வதற்கு ஏராளமான வாய்ப்பு கள் உள்ளன. முன் எப்போதும் இல்லாத வகையில் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் சுமார் ரூ.39,500 கோடி யாக உள்ளது. இதை ரூ.66,500 கோடியாக (10 பில்லியன் டாலர்) அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர் எர்டொகன் கூறும்போது, “தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவின் முயற்சிக்கு துருக்கி எப்போதும் உறுதுணையாக இருக்கும். தீவிரவாதிகள் அனைவரும் ரத்த வெள்ளத்தில் மூழ்குவார்கள்” என்றார்.

சர்ச்சை பேச்சு

முன்னதாக, தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த எர்டொகன், “காஷ்மீரில் இனிமேலும் மனித உயிரிழப்பை அனுமதிக்கக் கூடாது. இந்தப் பிரச்சினைக்கு பலதரப்பு பேச்சுவார்த்தை மூலம் நிரந்தர தீர்வு காண வேண்டும்” என்றார்.

காஷ்மீர் பிரச்சினை இந்தியா-பாகிஸ்தான் இடையிலான இரு தரப்பு பிரச்சினை. இதில் மூன்றாம் தரப்புக்கு இடமே இல்லை என்ற இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு எதிராக எர்டொகன் கருத்து கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x