

காஷ்மீரில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி பகதுர் அலி மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நேற்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
கடந்த ஆண்டு ஜூலை 24-ம் தேதி வடக்கு காஷ்மீர் எல்லையில் உள்ள யஹமா கிராமத்துக்குள் ஊடுருவ முயன்ற பகதுர் அலி பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார். இவர் மீது என்ஐஏ போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானிலிருந்து செயல் படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிர வாத இயக்கத்தைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் இவர், டெல்லி உள்ளிட்ட பல பகுதி களில் தாக்குதல் நடத்த திட்ட மிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள மாவட்ட நீதிபதி அமர்நாத்தி டம் அலி மீது நேற்று என்ஐஏ போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தானைச் சேர்ந்த பகதுர் அலி உள்ளிட்ட 3 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் (காஷ்மீர்) ஊடுருவி உள்ளனர். பின்னர் 7 நாட்களாக நடந்து வந்துள்ளனர். இதைப் பார்த்த பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். அவர் இப்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சில பகுதிகளின் வரைபடம், டைரி, ஜிபிஎஸ் சாதனம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. மேலும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பிடம் இவர் பயிற்சி பெற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்து வதற்காகவே இவர் இந்தியாவுக் குள் ஊடுருவி உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்திய தண்டனை சட்டம், சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், வெடிப்பொருட்கள் சட்டம், ஆயுத சட்டம், வெளிநாட்டினர் சட்டம் மற்றும் இந்திய வயர் லெஸ் டெலகிராபி சட்டம் ஆகிய வற்றின் கீழ் அலி மீது என்ஐஏ குற்றம்சாட்டி உள்ளது.