

காஷ்மீரில் கடந்த ஜூலை 8-ம் தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டர் புர்ஹான் வானி கொல்லப்பட்ட சம்பவத்தால் காஷ்மீர் பள்ளத்தாக்கு அமைதி இழந்துள்ளது. கடந்த 1 மாதமாக நிகழ்ந்து வரும் வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 55 பேர் இறந்துள்ளனர்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்நிலை ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் உள்துறை, பாதுகாப்பு, நிதி அமைச்சக உயரதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மெகபூபா கூறியதாவது:
ஜம்மு காஷ்மீர் மக்களின் காயங்களை குணப்படுத்துவது அவசியம். இதற்கு மக்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். காஷ்மீரில் இதுபோல் கடந்த 2008, 2010-லும் போராட்டங்கள் நடந்தன. நமது மக்கள் கொல்லப்பட்டனர். நமது குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இதன் பிறகும் யாரும் கொல்லப் படுவதை நான் விரும்பவில்லை.
தற்போதைய மக்களவையில் ஆளும் கட்சி பலம் பொருந்தி யதாக உள்ளது. பிரதமர் மோடி இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு காஷ்மீர் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதன் மூலம் அவர்களின் இதயங்களை வெல்ல வேண்டும்.
காஷ்மீர் மக்களின் பிரச்சினை களை தீர்க்க அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கான நடை முறைகளை பிரதமர் மோடி தொடங்குவார் என நம்புகிறேன். வாஜ்பாய் பிரதமராக இருந்த போது காஷ்மீர் மக்களின் இதயங் களை வெல்ல மேற்கொண்ட அதே முயற்சிகளை தற்போதும் மேற்கொள்வது அவசியம்.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கிட இரு நாடுகள் இடையே இணைப்பு ஏற்படுத்தும் பாலமாக ஜம்மு காஷ்மீர் விளங்கிடும். இவ்வாறு மெகபூபா கூறினார்.