

தனித் தெலங்கானா அமைக்க எதிர்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டுள்ளதால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது.
நாடாளுமன்றம் தொடர் முடக்கத்தை தடுக்கும் வகையில், பாஜக தலைவர்களுக்கு பிப்ரவரி 12-ஆம் தேதி இரவு விருந்து அளித்து, நிகழ்ச்சியின் போது பிரதமர், முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தயிருக்கிறார்.
பாஜக மூத்த தலைவர் அத்வானி, மக்களவை, மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகியோருக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னதாக இந்த விருந்து நிகழ்ச்சி இன்று நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் அத்வானி காந்திநகரில் இருப்பதால் விருந்து நிகழ்ச்சி 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில பிரிவினைக்கு பாஜக ஆதரவு தெரிவித்திருந்தாலும், சீமாந்திரா பகுதி மக்களுக்கு உரிய நீதி கிடைக்கும் வகையில், மசோதாவில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
பாஜக முன்வைத்த சட்ட திருத்தங்களுக்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் வரும் 12-ஆம் தேதி விருந்து நிகழ்ச்சியின் போது பிரதமர் பாஜக தலைவர்களிடம் இதனை தெரிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தெலங்கானா மாநிலம் அமைக்க கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மசோதா குடியரசுத் தலைவர் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்ற பிறகு மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
ஆந்திர பிரிவினைக்கு மத்திய அரசு ஏற்கெனவே இசைவு தெரிவித்து விட்டதால், மசோதாவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டட்தொடரிலேயே நிறைவேற்ற வேடிய நிர்பந்தத்தில் மத்திய அரசு இருக்கிறது.