எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: 5 இந்தியர்கள் பலி; 26 பேர் படுகாயம்

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: 5 இந்தியர்கள் பலி; 26 பேர் படுகாயம்
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லையோர கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலியாகினர், 26 பேர் படுகாயமடைந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை தாக்குதலுக்குப் பின்னர் இன்றும் (திங்கள்கிழமை) பூஞ்ச் மாவட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஜம்முவில் சர்வதேச எல்லைப்பகுதியில் உள்ள இந்திய நிலைகள், கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தாஸ் ராணுவத்தினர் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 13 வயது சிறுமி உள்பட 5 பேர் பலியாகினர், 26 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கடந்த 2003-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். அர்னியா பகுதியில் நடத்தப்பட்ட இத்தாக்குதல் 13 வயது சிறுமி உள்பட 5 பேர் கொல்லப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், அர்னியா, ஆர்.எஸ்.புரா பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது என்றார்.

காயமடைந்தவர்கள் அனைவரும் ஜம்மு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தவிர, அவசர நிலை கருதி மருத்துவ உதவிக் குழுவும் அப்பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "அண்மையில் நடந்த தாக்குதலில் இது மிகவும் மோசமான தாக்குதல்" என கூறியுள்ளார்.

அக்டோபர் மாதம் தொடங்கிய முதலே பாகிஸ்தான் அத்துமீறல் அதிகரித்துள்ளது. கடந்த 3 நாளில் 3-வது முறையாக தாக்குதல் நடைபெற்றுள்ளது.

தீவிரவாதிகள் சுட்டுக்கொலை:

இதற்கிடையில், இன்று அதிகாலை தாங்தார் பகுதியில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகளை இந்திய வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

ஜம்மு-காஷ்மீரில் எல்லையில் அத்துமீறி ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

வடக்குக் காஷ்மீரில் தாங்தார் மாவட்டத்தில் இந்திய எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து அங்கு படைகளை அதிகப்படுத்திய இந்திய ராணுவத்தினர் தீவிரவாதிகளை குறிவைத்து கடும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இருதரப்புக்கும் இடையே வெகு நேரம் நீடித்தத் துப்பாக்கிச் சண்டையில், 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் இருந்து ஏ.கே-47 ரக துப்பாக்கிகளும், அதற்கான தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in