

இந்திய நிதியுதவியால் புனரமைக் கப்பட்ட யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தை, அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுடன் இணைந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி பேசியதாவது:
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானம் வெறும் செங்கல் மற்றும் கலவையால் மட்டும் கட்டப்பட்டதல்ல. இது இரு நாடுகளின் நம்பிக்கை மற்றும் பொருளாதார வளர்ச்சியின் சின்னமாக விளங்குகிறது. வடக்கு மாகாண இளைஞர்களின் வளமான சுகாதாரமான எதிர்காலத்துக்கு இந்த அரங்கம் உதவியாக இருக்கும்.
இந்த திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவிய அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு நன்றி.
நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்துக்காக இலங்கை அரசு எடுக்கும் அனைத்து நடவடிக் கைகளுக்கும் இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும். நம் உறவு என்பது இரு நாட்டு அரசுகளுக்கு இடையிலானது மட்டுமல்ல. வரலாற்று தொடர்பு, கலாச்சாரம், மொழி, கலை மற்றும் புவியியல் ரீதியாக நம் இரு நாடுகளுக்கு இடையே நீண்டகால உறவு நீடித்து வருகிறது.
இந்திய பொருளாதார வளர்ச் சியால் அண்டை நாடுகளும் பயனடையும் என்று நம்புகிறோம். அந்த வகையில் பொருளாதார வளமிக்க நாடாக இலங்கை உருவெடுக்க வேண்டும் என்பது இந்தியாவின் விருப்பம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர் இந்தியாவின் உதவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா பேசும்போது, “சமரச மையமாக இந்த மைதானம் விளங்குவதாக நான் கருதுகிறேன். ஏனென்றால், இந்த மைதானத்தில் அமர்ந்திருக்கும்போது, சாதி, மதம், இனம் என்ற எந்த ஒரு வித்தியாசத் தையும் நம்மால் உணர முடியாது. விளையாட்டும், விளையாட்டு மைதானமும் சமரசத்தின் சின்ன மாக விளங்குகிறது” என்றார்.
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாண தலைநகரான யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்த மைதானம், உள்நாட்டுப் போர் காரணமாக கடந்த 1997-ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படாமல் இருந்தது.
இதை, இந்திய அரசு ரூ.7 கோடி செலவில் புனரமைத்துள்ளது. இதற்கு அந்த நகர முன்னாள் மேயர் மறைந்த ஆல்ப்ரட் தம்பிராஜா துரையப்பாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்கு 1,850 பேர் அமர்வதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளன.
யாழ்ப்பாணத்தில் நடை பெற்ற திறப்புவிழா நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், இலங்கைக்கான இந்தியத் தூதர் சின்கா, துணைத் தூதர் என்.நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புதுப்பிக்கப்பட்ட இந்த மைதானத்தில் முதல் நிகழ்ச்சியாக, 2-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சூரிய நமஸ்காரம் செய்தனர்.
இதுகுறித்து மோடி கூறும் போது, “சர்வதேச யோகா தினத்தை அறிவிக்க வேண்டும் என ஐ.நா.வில் இந்தியா கோரிக்கை வைத்தபோது இலங்கைதான் அதற்கு முதன்முதலில் ஆதரவு அளித்தது என்பதை இங்கு நினைவுகூர விரும்புகிறேன்” என்றார்.