

தனது மகன் தற்கொலை செய்து கொள்கிற நபர் இல்லை என்றும் மகனின் மர்ம மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் முத்துக்கிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தம் கூறியுள்ளார்.
ஜேஎன்யு பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் முத்துக்கிருஷ்ணனின் தற்கொலை குறித்து அவரது தந்தை ஜீவானந்தம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, "எனது மகன் தற்கொலை செய்து கொள்கிற நபர் கிடையாது. அவனது மரணத்துக்கு முந்தைய தினம் கூட வீட்டில் உள்ளவர்களிடம் வழக்கம் போலவே தொலைபேசியில் பேசினார். எனது மகனின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். மேலும் எனது மகனின் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும்" என்று கூறினார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் நவீன வரலாற்றுப் பாடத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் தெற்கு டெல்லியின் முனிர்கா விஹார் பகுதியில் உள்ள அவரது நண்பரின் வீட்டில் இருந்து திங்கள்கிழமை மாலை அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
முத்துக்கிருஷ்ணனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர்கள் உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.