

ஜம்மு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு காணும் முயற்சியை, தீவிரவாதத் தாக்குதல்களால் முறியடிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
ஜம்முவில் இன்று காலை தீவிரவாதிகள் நடத்திய பயங்கரத் தாக்குதலில், 6 ராணுவ வீரர்கள், 4 காவலர்கள் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தையொட்டி, அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், அங்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேசவுள்ளார்.
ஜம்முவில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் நடவடிக்கை என்று காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்காவில் இருக்கும் பிரதமர் மன்மோகன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் ஜம்மு தீவிரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலைக் காட்டுமிராண்டித்தனமானது என்று குறிப்பிட்டுள்ள அவர், இதுபோன்ற செயல்களின் மூலம் இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சியை சீர்குலைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எல்லைப் பகுதியில் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.