Last Updated : 12 Feb, 2017 12:01 PM

 

Published : 12 Feb 2017 12:01 PM
Last Updated : 12 Feb 2017 12:01 PM

எதிரி ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி புகழாரம்

எதிரி ஏவுகணையை இடைமறித்து தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது. இந்தச் சாதனையைப் படைத்த விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (டிஆர்டிஓ) பல்வேறு நவீன ஆயுதங் களை தயாரித்து ராணுவத்துக்கு வழங்கி வருகிறது. அதன் ஒரு கட்டமாக எதிரி நாடுகளில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை வானில் இடைமறித்து தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணையை டிஆர்டிஓ விஞ்ஞானிகள் தயாரித்தனர். இந்த ஏவுகணை ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகில் உள்ள அப்துல் கலாம் தீவில் (வீலர் தீவு) இருந்து நேற்று காலை 7.45 மணிக்கு ஏவி பரிசோதிக்கப்பட்டது.

இதுகுறித்து டிஆர்டிஓ அதிகாரிகள் கூறும்போது, ‘‘பிடிவி ஏவுகணை திட்டத்தின் கீழ் பூமியில் 50 கி.மீ. உயரத்தில் எதிரிகள் அனுப்புவது போல் ஏவுகணை செலுத்தப்பட்டது. அதேவேளையில் இடைமறித்து தாக்கும் ஏவுகணை கணினியின் கட்டளைகள்படி உடனடியாக விண்ணில் புறப்பட்டு அதை இடைமறித்து தாக்கி அழித்தது. இந்தச் சோதனை முழு வெற்றி அடைந்துள்ளது’’ என்றனர்.

மேலும், இது இரண்டு இடைமறிப்பு ஏவுகணைகளை கொண்டதாகும். மிக உயரத்திலும், மிக தாழ்வாகவும் வரும் எந்த எதிரி ஏவுகணைகளாக இருந்தாலும், அவற்றை துல்லியமாக கண்டறிந்து இடைமறித்து தாக்கும் வகையில் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 2000 கி.மீ. தூரத்தில் வங்கக் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராணுவ கப்பலில் இருந்து எதிரிகள் அனுப்புவது போல் ஏவுகணை அனுப்பப்பட்டது. அதை இடை மறிப்பு ஏவுகணை சரியாக தாக்கி அழித்தது குறிப்பிடத்தக்கது.

எதிரி ஏவுகணையை உடனடி யாக கண்டறிவது, வானில் அது வரும் பாதையை துல்லியமாகக் கணிப்பது, வானில் அதை இடை மறிப்பது போன்ற செயல்பாடுகள் எல்லாம் ரேடார் மற்றும் கணினி மூலம் தானாகவே நடைபெறும் வகையில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் மோடி, கூறும்போது, ‘‘நமது விஞ்ஞானி களின் சாதனையை மிகவும் பாராட்டுகிறேன். துல்லியத் தாக்குதல் நடத்தியபோது, எதிர்க் கட்சியினர் அதற்கு ஆதாரம் கேட்டனர். இப்போது இடைமறிப்பு ஏவுகணை வெற்றி பெற்றுள்ளது. இதற்கு ஆதாரம் வேண்டுமானால், எதிர்க்கட்சியினர் வானில் மிகமிக உயரமாகப் பறக்க வேண்டும்’’ என்று கிண்டலாக கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x