

பெண் நிருபருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்ட தெஹல்கா இதழ் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் நீதிமன்றக் காவல் மேலும் 12 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெண் நிருபரிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரையடுத்து தெஹல்கா நிறுவனர் தருண் தேஜ்பாலை கோவா காவல்துறை கைது செய்தது.
இதனையடுத்து அவர் விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுக்கப்பட்டார். போலீஸ் காவல் முடிந்து கடந்த 11-ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் தேஜ்பால் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது போலீஸ் விசாரணை முடிந்துவிட்டதால், 12 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை வாஸ்கோ நகரில் உள்ள சடா கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது 12 நாள் காவல் முடிவடைந்ததை அடுத்து இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி, தேஜ்பால் நீதிமன்றக் காவலை மேலும் 12 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார். தேஜ்பால் வழக்கறிஞர் ஜாமீன் கோரியிருந்தும் அதை நீதிபதி நிராகரித்துவிட்டார்.