

புரட்சிகர மார்க்சிஸ்ட் தலைவர் சந்திரசேகரன் கொலை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆதரவு தெரிவித்துள்ள வி.எஸ்.அச்சுதானந்தனின் நிலைப்பாட்டுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கேரள மாநில புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் சந்திரசேகரன் கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் படுகொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய மார்க்சிஸ்ட் பிரமுகர்கள் உள்பட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோழிக்கோடு சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சந்திரசேகரனின் மனைவி ரெமா, இக்கொலைக்குப் பின்னணியில் நிகழ்ந்த சதி, கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் சிலருக்கு இக்கொலையில் உள்ள தொடர்பு ஆகியவை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உண்ணாவிரதம் இருந்தார். சிபிஐ விசாரணைக்கு கேரள அரசும் ஒப்புக் கொண்டுள்ளது. இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் வி.எஸ். அச்சுதானந்தனும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் உம்மன்சாண்டிக்கு எழுதிய கடிதத்தில், சிபிஐ விசாரணைக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில், அச்சுதானந்தனின் நிலைப்பாடு கட்சியின் கருத்தல்ல என மார்க்சிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் டெல்லியில் கூறுகையில், “சிபிஐ விசாரணை தேவையில்லை. இவ்வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளது. இதுதான் கட்சியின் நிலைப்பாடு” என்றார். மார்க்சிஸ்ட் கேரள மாநில செயலாளர் பினராயி விஜயன் கூறுகையில், “இவ்விஷயத்தில் அச்சுதானந்தன் தெரிவித்துள்ள கருத்து, கட்சியின் கருத்தல்ல” என்றார்.