

லெஹர் புயல் ஆந்திர கடற்கரையை நாளை (வியாழன்) பிற்பகலில் தாக்கி கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, புயலை எதிர்கொள்வதற்காக, கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மசூலிப்பட்டினத்திற்கும், கலிங்கப்பட்டினத்திற்கும் இடையில் மணிக்கு 170 கி.மீ வேகத்தில் லெஹர் புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் பைலின் புயல் அளவுக்கு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
புயல் எச்சரிக்கை விஞ்ஞானி எம்.மொஹபாத்ரா கூறுகையில், இது மிகத் தீவிரமான புயலாக இருக்கும். தற்போது மணிக்கு 140-150 கி.மீ அளவுக்கு காற்றின் வேகம் இருக்கிறது. இதன் செறிவு அதிகமாகி, 150-160 கி.மீ வேகத்தில் மசூலிப்பட்டினம் கடற்கரை அருகே ஆந்திரத்தைத் தாக்கக் கூடும் என்றார்.
லெஹர் புயல் கரையைக் கடக்கும் போது, குண்டூர், கிருஷ்ணா மேற்கு மற்றும் கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 170 கி.மீ. வேகத்தில் புயல் தாக்கக் கூடும். பாண்டிச்சேரியின் ஏனாம் பகுதியில் 100-110 கி.மீ. வேகத்தில் புயல் கரையைக் கடக்கும். விஜயநகரம் பகுதியில் 120 கி.மீ. வேகத்தில் புயல் தாக்கக்கூடும்.
புயல் கரையைக் கடக்கும் பகுதிகளில் கச்சா வீடுகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும், மின் விநியோகம், தகவல் தொடர்பு, சாலைப் போக்குவரத்து ஆகியவையும் பாதிக்கப்படும். காற்றின் வேகத்தில் பறக்கும் பொருள்களால் அபாயம் உண்டு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேற்கு கோதாவரி மாவட்ட ஆட்சியர் நீது குமாரி பிரசாத் கூறுகையில், “ இதுவரை 25 கிராமங்களைச் சேர்ந்த 8,500 பேர் 77 நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் முகாம்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கடலுக்குள் சென்ற 14 மீன்பிடி படகுகளில் 13 படகுகள் கரைக்கு வந்துவிட்டன. எஞ்சிய ஒரு படகும் வந்து கொண்டிருக்கிறது.
தேசிய பேரிடர் மீட்புப் பிரிவின் 14 குழுக்களும், காக்கிநாடா மற்றும் ராஜமுந்திரியில் தலா ஒரு ராணுவக் குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றார்.