

மாட்டிறைச்சி தடைக்கு எதிராக புதிய சட்டத்தைக் கொண்டு வருவது தொடர்பாக கேரள சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் வரும் 8-ம் தேதி நடக்கிறது.
கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சர வைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அரசு சமீபத்தில் விதித்த மாட்டிறைச்சி தடை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
மாநில அரசின் உரிமையைக் காக்கும் வகையில் மாட்டிறைச்சி தடைக்கு எதிராக புதிய சட்டத்தை இயற்றுவது பற்றி விவாதிக்க சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
வரும் 8-ம் தேதி சிறப்பு கூட்டத்தைக் கூட்ட ஆளுநருக்கு அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக புதிய சட்டம் பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் அனைத்து மாநில முதல்வர்களிடம் ஆலோசிப்பது பற்றி வரும் 5-ம் தேதி டெல்லி சென்று மார்க்சிஸ்ட் தலைவர்களை பினராயி விஜயன் சந்தித்து பேச உள்ளார்.
மதுக் கடைகள் விரைவில் திறப்பு
கேரள அரசு மதுபானச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததை அடுத்து, அங்கு மூட்டப்பட்ட மதுக்கடைகள் மீண்டும் திறப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் போது கேரளாவில் மதுபானச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இதன்மூலம் 5 நட்சத்திர விடுதிகளில் மட்டும் இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்களை விற்க முடியும். இதனால் மாநிலம் முழுவதும் சுமார் 700 மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் அரசுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இதனைக் கருத்தில் கொண்டு தற்போது மார்க்சிஸ்ட் தலைமையிலான அரசு, கேரள நகராட்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் உள்ளாட்சி நிர்வாகங்களே மதுபானக் கடைகளுக்கு அனுமதி வழங்க முடியும். இந்தச் சட்டத்திருத்தத்துக்கு கேரள ஆளுநர் பி.சதாசிவம் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, கேரளாவில் பழையபடி மூடப்பட்ட கடைகள் திறக்கப்படுவதுடன், அனைத்துக் கடைகளிலும் உயர்ரகம் உள்ளிட்ட அனைத்து வகையான மதுபானங்களும் கிடைக்கும். இந்தச் சட்டத்திருத் தத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், மது எதிர்ப்பாளர் களும் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.