Last Updated : 30 Jun, 2016 12:33 PM

 

Published : 30 Jun 2016 12:33 PM
Last Updated : 30 Jun 2016 12:33 PM

லண்டனில் பிறந்தநாளை கொண்டாடுகிறார் உ.பி. முதல்வர் அகிலேஷ்

தனது 43 ஆவது பிறந்தநாளை லண்டனில் கொண்டாகிறார் உ.பி. முதல் அமைச்சரான அகிலேஷ் சிங் யாதவ். இதற்காக அவர் குடும்பத்துடன் விடுமுறை கொண்டாட அங்கு செல்கிறார்.

சமாஜ்வாதி கட்சி ஆளும் உ.பி.யில் முதல்வராக பதவி வகிக்கும் அகிலேஷ் நேற்று (புதன்கிழமை) டெல்லி கிளம்பி வந்தார்.

தனது மனைவி டிம்பிள் யாதவ், எம்பி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வந்தவர் தனது சித்தப்பாவான ராம் கோபால் யாதவின் 70 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.

சமாஜ்வாதியின் தலைவரான முலாயம் சிங்கின் சகோதரரான ராம் கோபால், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார்.

இதை முடித்து இரவு குடும்பத்துடன் லண்டன் கிளம்பிச் செல்கிறார். அங்கு நாளை ஜூலை 1 அன்று வரும் தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதன் பிறகு ஜூலை 4-ல் அகிலேஷ் லக்னோ திரும்புவதாகக் கூறப்படுகிறது.

இதுபோல், ஒரு மாநில முதல்வர் தன் பிறந்தநாளை வெளிநாடுகளில் கொண்டாடுவது அநேகமாக முதன் முறை எனக் கருதப்படுகிறது. இவரது பிறந்த நாளை உபியில் சமாஜ்வாதி கட்சியினர் விமரிசையாகக் கொண்டாட உள்ளனர்.

உபியின் சிறைத்துறை அமைச்சர் பல்வந்த் சிங் ராமூவாலியா, உபி முதல்வரின் பிறந்தநாளை ‘பந்தி சமாஜ்வாதி பலாய் மிஷன்(சமாஜ்வாதியினரின் நலவாழ்வு நோக்கம்)’ எனக் கொண்டாட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் சார்பில் 43 சிறைக்கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இம் மாநிலத்தின் பல்வேறு சிறையில் இருக்கும் இந்தக் கைதிகள் தமக்கு நீதிமன்றம் சார்பில் பெயில் கிடைத்தும் அதன் ஜாமீன் தொகையை கட்ட இயலாமல் தண்டனையை அனுபவிப்பவர்கள் ஆவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x