

மத்திய மனிதவளத்துறை இணை அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். காஷ்மீர் பெண்ணான சுனந்தா புஷ்கர் (52) ஏற்கெனவே மணமாகி, கணவரை விட்டுப் பிரிந்த நிலையில், சசிதரூரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தரார் என்பவருடன் சசிதரூருக்கு தொடர்பு இருப்பதாக சுனந்தா, ட்விட்டரில் புகார் தெரிவித்திருந்தார். இந்தப் புகாரை சசிதரூர் மறுத்தார். 'ட்விட்டரில் விஷமிகள் கைவரிசை காட்டியுள்ளனர். எங்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்கிறது' என்று சசிதரூர் சுனந்தா சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சுனந்தா மர்மமான முறையில் வெள்ளிக்கிழமை இறந்துகிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மாநகர போலீஸார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். தற்கொலையாக இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிவதாக போலீஸார் கூறினர். விசாரணைக்குப் பிறகே, மரணத்துக்கான முழு தகவல்கள் வெளிவரும்.