

பசி மற்றும் ஊட்டச்சத்து இன்மைக்கு எதிராகப் போராடி வரும் அங்கித் கவத்ரா (25) என்னும் இந்திய இளைஞருக்கு இங்கிலாந்து ராணி இளம் தலைவர்கள் விருது வழங்கிக் கவுரவித்துள்ளார்.
பக்கிங்காம் அரண்மனையில் நடைபெற்ற இந்த விழாவில், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் விருது வழங்கியுள்ளார்.
எதற்காக இந்த விருது?
இந்தியாவில் பசி மற்றும் உணவை வீணாக்குதலை ஒழிக்க அங்கித், 'ஃபீடிங் இந்தியா' என்னும் அமைப்பைத் தொடங்கியுள்ளார்.
2014-ல் 5 பேரோடு ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு, இன்று இந்தியா முழுக்க 43 நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இதில் 4,500 தன்னார்வலர்கள் பணிபுரிகின்றனர். மீதமாகும் உணவு 80 லட்சம் மக்களுக்கு அளிக்கப்படுகிறது.
இந்த சேவையைப் பாராட்டி அங்கித்துக்கு இங்கிலாந்து ராணி உயரிய விருதை வழங்கியுள்ளார்.
இதுகுறித்துப் பேசும் அங்கித், ''நான் கனவில் கூட நினைத்துப் பார்க்காத விஷயம் நிகழ்ந்துள்ளது. பக்கிங்காம் அரண்மனையில் இங்கிலாந்து ராணியின் கையால் விருது பெற்றதைப் பெருமையாகக் கருதுகிறேன்.
இது இந்திய மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையேயான நீண்ட கால பாரம்பரியத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த பயணத்தின்போது ஏராளமான முன்னணித் தொழிலதிபர்களையும், கொடையாளிகளையும் சந்தித்தேன்.
ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், அன்றாடம் மூன்று வேளை உணவுக்கே போராட வேண்டிய நிலையில் இருக்கின்றனர். அவர்களுக்காகவே நாங்கள் செயல்படுகிறோம்'' என்றார்.
இங்கிலாந்து ராணி இளம் தலைவர் விருதுக்காக, உலகம் முழுவதும் உள்ள 60 தலைசிறந்த இளைஞர்களைத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களின் வயது 18 முதல் 29-க்குள் இருக்க வேண்டும். தங்களின் திறமையைக் கொண்டு மற்றவர்களின் வாழ்க்கையை நல்ல முறையில் மாற்றும் இளம் தலைவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.