

மாயமான மலேசிய விமானத்தின் தடயங்கள் இன்னும் கிடைக்காதது பெரிய புதிராகவே தொடர்கிறது. கட்டுப்பாட்டு அறையின் தொடர்பிலிருந்து மறைவதற்கு முன் தனது வழித்தடத்திலிருந்து விமானம் விலகி சென்றிருக்கலாம் என்று மலேசிய அதிகாரிகள் கருதுகின்றனர்.
ஐந்து இந்தியர்கள் உள்ளிட்ட 239 பேருடன் சனிக்கிழமை நள்ளிரவு சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு புறப்பட்ட மலேசிய விமானம் அடுத்த ஒரு மணி நேரத்தில் காணாமல் போனது. அது கடலில் விழுந்திருக்கலாம் என்று கூறப் பட்டாலும் விமானத்தின் சிதறல்களோ உடைந்த பாகங்களோ இதுவரை கிடைக்கவில்லை.
பல நாடுகள் இணைந்து தேடுதல் பணியை நடத்தி வருகின்றன. விமானத்தின் வழித்தடத்திலிருந்து நூற்றுக்கணக்கான கி.மீ. பரப்பளவில் அந்தமான் கடல் பகுதியையும் உள்ளடக்கி தேடுதல் பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மாயமான விமானத்தை கண்டுபிடிக்க உதவும்படி இந்தியாவிடம் மலேசியா கேட்டுக்கொண்டுள்ளது. இதையடுத்து, இந்த விவகாரத்தை கையாளவும், உரிய தகவல்களை பகிர்ந்து கொள் வதற்கான நடவடிக்கைகளை மேலெடுத் துச் செல்லவும் சரியான நபர்கள் நியமிக் கப்படுவதாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். அந்தமான் கடல்பகுதியிலும் தேடுதல் பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளதால் இந்தியாவின் உதவியை மலேசியா கோரியிருக்கிறது.
மாயமான மலேசிய விமானத்தை தேடுவதற்காக விமானப்படையும் தயார் நிலையில் உள்ளதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த விமானம் மேலே பறந்தபோது தலைகீழாக திரும்பி இருக்கும். அதன் பின்னர் அது வழித்தடத்திலிருந்து விலகி ரேடாரின் கட்டுப்பாட்டுக்குள் வராமல் போய் இருக்கலாம்.
எனவே தான் நீண்ட பரப்பளவுக்கு தேடுதல் மற்றும் மீட்புப் பணி விரிவு படுத்தப்பட்டுள்ளது என மலேசிய விமானப்படை தலைவர் ரோட்ஸலி தாவுத் தெரிவித்தார்.
மலேசிய அரசின் ரேடாரில் விமானம் செல்வது கடைசியாக பதிவான பிறகு கடற்பரப்பின் மேலேசென்றபோது வழித்தடத்திலிருந்து விலகி மலேசி யாவை கடந்து நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள மலாக்கா நீரிணை பகுதியை அடைந்தது தமது ரேடாரில் பதிவாகி இருப்பதாக ராணுவம் வெளியிட்ட தகவல் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, தென் சீன கடல் பகுதியில் மாயமான விமானம் விழுந்து கிடக்கிறதா என்பதை கண்டறிய சனிக் கிழமை அதிகாலையிலிருந்து நடந்து வரும் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் எவ்வித பலனும் கிடைக்க வில்லை. தேடும் பணியில் 10 நாடுகளைச் சேர்ந்த குழுவினர் 40 கப்பல்கள் 34 விமானங்கள் ஈடுபடு கின்றன.
35000 அடி உயரத்தில் பறந்தபோது வியத்நாமின் தென் முனைப்பகுதிக்கும் மலேசியாவின் கிழக்கு பகுதி அருகே உள்ள கோடா பாரு பகுதிக்கும் இடையே சென்ற போதுதான் கடைசியாக கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்து விமானம் மறைந்தது.
விமானம் மாயமான சம்பவத்தில் பயங்கரவாத தொடர்பு இருக்கலாம் என்பதை மறுக்க முடியாது என்று அமெரிக்காவின் சி.ஐ.ஏ. தெரிவித்திருக் கிறது.