

டெல்லி சட்டமன்றத்தில் வியாழக் கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.
ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு ஆதரவாக காங்கிரஸை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்கள், ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ., சுயேச்சை எம்.எல்.ஏ. ஆகியோர் வாக்களித்தனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் அர்விந்த் சிங் லவ்லி பேசியதாவது:
நாங்கள் ஏற்கெனவே கூறியபடி ஆம் ஆத்மி அரசுக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை. டெல்லிவாசிகள் ஆம் ஆத்மி ஆட்சியை விரும்பு கிறார்கள். எனவே இந்த அரசு மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதற்காக ஆதரவு வழங்குகிறோம்.
இதுதொடர்பாக இரு கட்சிகள் இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. எந்தவித மான ஒப்பந்தங்களும் போடப் படவில்லை. மக்களுக்கு நற்பணி களை செய்தால் அரசுக்கு காங்கிரஸ் அளிக்கும் ஆதரவு 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஆம் ஆத்மி கட்சி அவசரம் காட்டக் கூடாது. இவர்கள் அறிவித்த இலவச நீரை நாங்கள் அளிக்க நினைத்தபோது அது முடியாது எனக் கூறிய அதிகாரிகள், அர்விந்த் கேஜ்ரிவாலிடம் ஒப்புக்கொண்டது எப்படி? இலவச தண்ணீர் தேவையானவர்களுக்கு இன்னும் போய் சேரவில்லை. 670 லிட்டர் நீரை இலவசமாக அறிவித்துவிட்டு அதன் கட்டணத்தை உயர்த்தி விட்டனர்.
காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கள் மீதான ஊழல் விசாரணைக்கு நாங்கள் தயாராக உள்ளோம். அதேநேரம் பாஜக ஆளும் டெல்லி மாநகராட்சியில் நடைபெறும் ஊழல் விவகாரங்களையும் விசாரிக்க வேண்டும் என்று அவர் பேசினார்.
முன்னதாக நம்பிக்கை வாக்கெடுப்புத் தீர்மானத்தை முன்மொழிந்து ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.வும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா பேசினார். அதன்பின் உறுப்பினர்களுக்குப் பதில் அளித்து முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பேசினார். தொடர்ந்து வாக்கெடுப்பு நடைபெற்றது.
70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 36 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. சட்டமன்றத்தின் தற்காலிக தலைவரும் காங்கிரஸ் உறுப்பினருமான சவுத்ரி மத்தீன் அகமது குரல் வாக்கெடுப்பை நடத்தினார்.
ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரித்து வாக்களிக்க விரும்புபவர்கள் எழுந்துநின்று ஆதரவு அளிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார். முதலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி தரப்பில் 28 எம்.எல்.ஏ.க்கள் எழுந்து நின்றனர்.
பிறகு எதிர்க்கட்சியில் ஆதரவு தருபவர்கள் எழுந்து நிற்குமாறு அவைத் தலைவர் கேட்டுக் கொண்டார். காங்கிரஸ் தரப்பில் 7 எம்.எல்.ஏ.க்களும், ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ. ஷோஹிப் இக்பால், சுயேச்சை எம்.எல்.ஏ. ராம்வீர் ஷோக்கின் ஆகியோர் எழுந்து நின்றனர். மொத்தம் 37 உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
பாஜகவின் 31 எம்.எல்.ஏ.க் களும் சிரோமணி அகாலிதள எம்.எல்.ஏ.வும் எதிர்த்து வாக்களித்த னர். இதையடுத்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அவைத் தலைவர் அறிவித்தார்.
இதன் பிறகு சபை மறு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு உறுப்பி னர்கள் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.