

பாஜக சட்டப்பேரவைத் தலைவராக மனோகர் லால் கட்டார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அவர் ஹரியாணா மாநில முதல்வராகிறார்.
ஹரியாணாவில் ஆட்சியமைக்க தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள போதும் யார் முதல்வர் என்பதை பாஜக இறுதி செய்யாமல் இருந்தது.
இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு இன்று ஹரியாணா பாஜக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் மனோகர் லால் கட்டார் பாஜக சட்டப்பேரவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவரே முதல்வராகப் பொறுப்பேற்கிறார்.
ஹரியாணாவில் ஆட்சி அமைக்க 46 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. பாஜகவுக்கு 47 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதால் அந்தக் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இதன்மூலம் காங்கிரஸின் 10 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனோகர் லால் கட்டார், "பாஜக தலைமை என்னை ஹரியாணா சட்டப்பேரவைத் தலைவராக தேர்வு செய்துள்ளது. ஹரியாணா மக்கள் நலனுக்காக பணியாற்றுவேன். எனது அரசு வெளிப்படையாக இருக்கும்" என்றார்.