

ஆந்திராவில் தனியார் பஸ் ஒன்று கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் ஒரு பெண் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 37 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தனியார் சொகுசு பஸ், 48 பயணி களுடன் கடந்த 27-ம் தேதி ஒடிஷா மாநில தலைநகரான புவனேஷ் வரில் இருந்து ஹைதராபாத்துக்கு புறப்பட்டது. ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டம், முல்லபாடு என்ற இடத்தில் சாலை இரண்டாக பிரிந்து மறுபடியும் கூடும் வகையில் பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த இரண்டு சாலைக்களுக்கு நடுவே சுமார் 30 அடி ஆழ பள்ளம் உள்ளது. இந்த பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த அந்த பஸ், தடுப்புச் சுவர் மீது மோதி கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர். பின்னர் விரைந்து வந்த வீரர்கள், 3 ராட்சத கிரேன்களின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த மற்ற அனைவரும் அருகில் உள்ள நந்திகாமா அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. இதில் ஒருவர் பெண். மேலும் 37 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ள தாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆந்திர மாநில சுகாதாரத் துறை அமைச்சர் காமிநேனி நிவாஸ், அமைச்சர் ராவல கிஷோர், எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, கிருஷ்ணா மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர்.
ஓட்டுநர் கிருஷ்ணா ரெட்டி தூங்கியதும், பஸ்ஸை வேகமாக ஓட்டியதும்தான் இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என ஆந்திர மாநில டிஜிபி சாம்பசிவ ராவ் விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்கள் சந்திரண்ண பீமா காப்பீடு திட்டத்தில் சேர்ந்திருந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், காப்பீடு இல்லாத வர்களுக்கு ரூ.3 லட்சமும், பிற மாநிலத்தைச் சேர்ந்த பயணி களுக்கு ரூ.2 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.
சகோதரர்கள் பலி
தெலங்கானா மாநிலம், நல் கொண்டா மாவட்டம், சூரியா பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணா ரெட்டி. ராணுவத்தில் டாக்டராக பணிபுரிந்து வந்த இவரது தம்பி சேகர் ரெட்டி. பொறியாளரான இவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பெண் பார்ப்பதற்காக இந்த பஸ்ஸில் ஹைதராபாத் சென்ற இவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.