மிகவும் பின் தங்கியிருக்கும் ரயில்வே திட்டப் பணிகள்: தமிழகத்தை புறக்கணிக்கிறதா மத்திய அரசு?

மிகவும் பின் தங்கியிருக்கும் ரயில்வே திட்டப் பணிகள்: தமிழகத்தை புறக்கணிக்கிறதா மத்திய அரசு?
Updated on
2 min read

அறிவிக்கப்பட்ட திட்டங்கள் உட்பட பல்வேறு வகையிலும் ரயில்வே அமைச்சகத்தால் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வருவதாகக் கருதப்படுகிறது.

புதுவகை பெட்டிகள் மாற்றம், கூட்டாண்மை நிறுவனம் அமைத்தல், புதிய ரயில் பாதைகள், புல்லட் ரயில் ஆகியவற்றின் பணிகளில் தமிழகம் மிகவும் பின் தங்கியிருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் ரயில் பெட்டிகளில் பெரும்பாலனவை சுவிட்சர்லாந்து தொழில்நுட்பத்தின் கீழ் தயாரிக்கப்பட்டவை. 1954-ம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்ட இவை குறைந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டவையாக இருந்தன. இந்நிலையில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் 1997 முதல் இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மன் ஆகிய நாடுகளின் கூட்டுத் தொழில்நுட்பத்தில் புதிய பெட்டிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. விபத்தில் சிக்கும்போது இந்த வகை பெட்டிகளில் உயிர்பலி குறைவாகவே ஏற்படும் எனவே நாட்டில் மொத்தமுள்ள சுமார் 50,000 ரயில் பெட்டிகளும் புதிய பெட்டிகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

இந்திய ரயில்வே தொழிற்சாலைகளில் தயாராகி வரும் இவ்வகை பெட்டிகளைக் கொண்டு இதுவரை, 10 சதவீத (5000) பெட்டிகள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன. இவற்றில் தமிழகம் மற்றும் கேரளாவில் ஓடும் 1317 ரயில்களில் 10 ரயில்களின் பெட்டிகள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன. இது மற்ற மாநிலங்களை விட மிகவும் குறைந்த அளவாகும்.

கடந்த 8 ஆண்டுளில் தமிழகத்தில் ஒரே ஒரு புதிய ரயில்பாதை மட்டுமே 2016-17-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரூ.134 கோடி செலவில் தர்மபுரி-மொரப்பூருக்கு இடையிலான ரயில் பாதை திட்டமாகும்.

மீட்டர் கேஜ் பாதைகளை அகல ரயில்பாதையாக மாற்றுதல், புதிய ரயில் பாதை அமைத்தல், கூடுதல் ரயில் பாதை அமைத்தல், ரயில் பாதையை மின்மயமாக்குதல் ஆகியவற்றில் தமிழகத்திற்காக இருபதுக்கும் மேற்பட்ட திட்டங்கள் திட்டமிடப்பட்டன. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மற்றும் தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தமிழக அரசால் இவை பரிந்துரைக்கப்பட்டன.

புதிய ரயில் பாதைகளில் சிதம்பரம் – ஆத்தூர் (வழிஅரியலூர்), போடிநாயக்கனூர் - கோட்டயம், மயிலாடுதுறை-காரைக்கால் (வழி தரங்கம்பாடி, திருக்கடையூர், திருநள்ளார்), தஞ்சாவூர் –அரியலூர், திண்டுக்கல் – குமுளி (வழி தேனி, போடி) ஆகியவை மீதான சர்வே பணிகளும் முடிந்து விட்டன. ரூ. 3,754.86 கோடி மதிப்பிலான இத்திட்டங்கள் ரயில்வே வாரியத்தின் அனுமதிக்காக காத்திருக்கின்றன.

இவை அனைத்துக்கும் அனுமதி கிடைக்கும் என்பதும் உறுதிஅல்ல. சர்வே அறிக்கையில் கூறப்படும் சில காரணங்கள் அடிப்படையிலோ அல்லது நிதிப் பற்றாக்குறை காரணமாகவோ அவை ரத்து செய்யப்பட்டு விடுவதும் உண்டு.

இதுபோல், கடந்த சில ஆண்டுகளில் 6 திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜோலார்பேட்டை – ஒசூர் (வழி கிருஷ்ணகிரி), ராமநாதபுரம் – கன்னியாகுமரி (வழிதூத்துக்குடி, திருச்செந்தூர்), காரைக்குடி - தூத்துக்குடி (வழிராமநாதபுரம்), காரைக்கால் - சீர்காழி, சேலம் - காரைக்கால் (வழி பெரம்பலூர், அரியலூர்), மதுரை - காரைக்குடி (வழி மேலூர்) ஆகியவை ரத்து செய்யப்பட்ட திட்டங்களாகும். ரூ.5,451.45 கோடி செலவில் அறிவிக்கப்பட்டு இவை ரத்தாகி உள்ளன. ரூ.3955.57 கோடியிலான மதுரை - எர்ணாகுளம் புதியரயில் பாதை திட்டம் சர்வே அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்புரத்து செய்யப்பட்டுள்ளது.

புதிய ரயில்பாதை திட்டங்களில் சென்னை – ஸ்ரீபெரும்புதூர் (வழி சைதாப்பேட்டை, கிண்டி, கொளப்பாக்கம், பூந்தமல்லி, புதுப்பூர்) திட்டத்தின் சர்வே 2014, ஜனவரி 31-ல் சமர்ப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளது. இதன் திட்ட மதிப்பீடு ரூ.915.19 கோடி ஆகும்.

சென்னை - வில்லிவாக்கம் இடையே 5-வது பாதை, வில்லிவாக்கம் –காட்பாடி கூடுதல் பாதை ஆகியவற்றுக்கு சர்வே முடிந்து விட்டது. ரூ. 1352.99 கோடி திட்டத்துக்கான அறிக்கை கடந்த 2009, பிப்ரவரி 28-ல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2015-16 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திருவனந்தபுரம்-கன்னியாகுமரி (வழி நாகர்கோயில்) இடையிலான ரூ.1,298.78 கோடி கூடுதல் பாதைக்கான சர்வேயும் முடிந்துள்ளது. இந்த திட்டங்கள் ரயில்வே வாரியத்தின் அனுமதிக்காக காத்துள்ளன.

புல்லட் ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ள பாதைகளில் சர்வே பணி நடைபெற்று வருகிறது. சென்னை - மும்பை புல்லட் ரயில் பாதை தொடர்பாக 2 இடைக்கால அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இறுதி அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை. இதுபோல் சென்னை – மைசூர் (வழி பெங்களூரூ) பாதையின் சர்வேயும் முடிந்து இறுதி அறிக்கைக்காக அரசு காத்துள்ளது. இவற்றில் பட்ஜெட்டில் சேர்த்து அறிவிக்கப்படுவது மட்டுமே அமலாகும்.

இதுபோன்ற திட்டங்கள் ரத்து செய்யப்படாமல் அமலாக்க வேண்டி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கூட்டாண்மை நிறுவனங்கள் அமைக்கத் தொடங்கியது. இதனால் மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்டும் திட்டங்களை எக்காரணம் கொண்டும் மத்திய அரசு ரத்து செய்யாது என்றநிலை உருவாக்கப்பட்டது. ஏனெனில், இதற்கான செலவை மத்திய அரசு முழுமையாக ஏற்பதில்லை. மத்திய அரசு 49 சதவீதமும் மாநில அரசு 51 சதவீதமும் ஏற்கும். இரு அரசுகளின் அதிகாரிகளும் இணைந்து அந்நிறுவனத்தில் பணியாற்றுவார்கள்.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா ஆகிய தென் மாநிலங்கள் உட்பட 9 மாநிலங்களில் இந்த கூட்டாண்மை நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் தென் மாநிலங்களில் தமிழகத்தில் இதுவரை இந்நிறுவனம் தொடங்கப்படவில்லை. இது தொடங்கப்பட்டால் தமிழகத்தால் பரிந்துரைக்கப்படும் ரயில் பாதை திட்டங்கள் தவறாமல் அமலாக வாய்ப்புள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in