Last Updated : 04 Oct, 2014 03:45 PM

 

Published : 04 Oct 2014 03:45 PM
Last Updated : 04 Oct 2014 03:45 PM

தூய்மையைப் பற்றி எங்களுக்கு பாடம் நடத்தத் தேவையில்லை: வால்மீகி காலனி மக்கள்

பிரதமர் நரேந்திர மோடியின் ‘தூய்மை இந்தியா’ விழிப்புணர்வு நாட்டில் பல்வேறு விதமாக மக்களிடையே தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய நிகழ்ச்சி மூலம் தொடங்கி வைத்தார். வால்மீகி காலனியில் மோடியே துடைப்பத்தைக் கொண்டு சுத்தம் செய்த காட்சி வீடியோவாகவும் புகைப்படமாகவும் நாடு முழுதும் வெளியானது.

இந்நிலையில் தூய்மைப் பணியாளர்கள் வாழும் வால்மீகி காலனி மக்களை இந்த விழாவில் முன்னிலைப் படுத்தவில்லை, மாறாக நகரின் பிற பகுதிகளில் வசித்து வரும் சிறுவர் சிறுமிகளை அழைத்து அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

இந்த வால்மீகி காலனியில் உள்ள 150 ஆண்டுகால புராதன வால்மீகி கோயில் விழாவுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் வந்து வழிபாடு செய்கின்றனர்.

அக்டோபர் 8ஆம் தேதி வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மைப்பணியாளர்கள், ஓட்டுனர்கள், என்.டி.எம்.சி. யில் பணியாற்றும் கிளார்க்குகள் என்று நிறைந்த வால்மீகி காலனி மக்கள் நிதி திரட்டி தெருக்களை சுத்தம் செய்வதோடு, சுவர்களுக்கு புதிய வண்ணம் பூசி, காலனியின் நுழைவாயில் முதல் வால்மீகி கோயில் வரை பளபள பல்புகள் கொண்டு அலங்கரிப்பும் செய்து வருகின்றனர்.

வால்மீகி ஜெயந்தி கொண்டாடப்படும் அக்டோபர் 8ஆம் தேதி அந்தக் கோயிலுக்கு சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் வால்மீகி காலனி வாசிகளில் ஓரிருவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவிக்கையில், “நாங்கள் எங்கள் சுற்றுப்புறம் மற்றும் வீடுகளை சுத்தமாகவே வைத்திருக்கிறோம், இந்த விஷயத்தில் யாரும் எங்களுக்குப் பாடம் நடத்தத் தேவையில்லை” என்று சரிதா பெனிவால் என்ற வால்மீகி காலனிவாசி ஒருவர் தெரிவித்தார்.

65 வயதான முன்னாள் முனிசிபல் ஊழியர் ஒருவர் கூறுகையில், “முதன் முறையாக இத்தனையாண்டுகளில் முனிசிபல் கார்ப்பரேஷன் ஒரு பகுதியில் இவ்வளவு கவனம் செலுத்தியது, ஒரே நாள் இரவில் புற்கள் முளைத்தன, ஒருவேளை ஃபெவிகால் பயன்படுத்தியிருப்பார்களோ? என்று கேலித் தொனியில் பேசினார்.

கிஷன்பால் மகராஜ் என்பவர் கூறுகையில், “தூய்மை இந்தியா பிரச்சாரத்திற்கு பிரதமர் தேர்வு செய்த 9 பிரபலங்களில் ஏன் வால்மீகி காலனியிலிருந்து ஒருவர் கூட இல்லை? குப்பையை வேண்டுமானால் அகற்றலாம், இப்போதும் சாக்கடை அடைத்து கொண்டால் நாங்கள்தான் நேரடியாக அதனைச் சுத்தம் செய்து வருகிறோம்” என்றார்.

மேலும், இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்துவதற்குப் பதிலாக எங்கிருந்தோ அழைத்துவரப்பட்ட பள்ளி மாணவ மாணவியர் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இது கட்சி நிகழ்ச்சியல்ல அரசு நிகழ்ச்சி என்று அவர்கள் கூறினாலும், பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாய்தான் மோடி கூடவே இருந்தார்”

என்று ஆதங்கத்தை சிலர் கொட்டினாலும் பலரும் பிரதமர் மோடியின் இந்தத் திட்டத்தை வரவேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x