

தமிழகத்தில் நேற்று காவிரி பிரச்சினை தொடர்பாக முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றதால், தமிழகத்துக்கு இயக்கப்படவிருந்த கர்நாடக அரசு பேருந்துகள் அனைத்தும் நேற்று ரத்து செய்யப்பட்டன.
காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறக்கக் கோரியும், கர்நாடக அரசைக் கண்டித்தும் தமிழக விவசாயிகள் சங்கங்களின் சார்பாக நேற்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. எனவே பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து தமிழக நகரங்களுக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்பட்டன.
கர்நாடக போக்குவரத்து கழகம் சார்பாக சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், சென்னை, ஊட்டி, கோவை, திருச்சி, மதுரை, திரு நெல்வேலி, நாகர்கோவில் உள் ளிட்ட நகரங்களுக்கு நேற்று பகலில் இயக்கப்பட இருந்த 596 பேருந்து களும் ரத்து செய்யப்பட்டன. ஓசூர் வரை செல்லும் பேருந்துகளும் கர்நாடக தமிழக எல்லையிலே நிறுத்தப்பட்டன.
இதனால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு;ச் செல்ல இருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். கர்நாடக அரசு பேருந்துகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் தமிழக அரசு பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதிகபடியான கூட்டத்தைச் சமாளிக்க முடியாத பெண்களும், முதியவர்களும் தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணத்தில் தமிழகத்துக்கு வந்தனர். தமிழக விவசாயிகளின் போராட்டம் முடிந்த பிறகு இரவு நேரத்தில் கர்நாடகாவில் இருந்து தமிழகத் துக்கு போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டன
தமிழ் திரைப்படம் ரத்து
மைசூரு, மாண்டியா, சாம்ராஜ் நகர் உள்ளிட்ட சில இடங்களில் திரையரங்குகளில் தமிழ் திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. மைசூரு மஞ்சுநாத் திரையரங்கில் தமிழ் திரைப்படம் திரையிட கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இதனிடையே தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறந்து விடுவதை கண்டித்து மைசூரு, மாண்டியா, பெங்களூரு உள்ளிட்ட இடங் களில் கன்னட அமைப்பினரும், கர்நாடக விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்களும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள 10 ஆயிரம் கன அடி நீரை உடனடியாக நிறுத்த வேண்டும் என முழக்கம் எழுப்பினர்.