Published : 21 Jun 2016 09:07 AM
Last Updated : 21 Jun 2016 09:07 AM

புல்லட் ரயில் சேவை வந்தவுடன் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு 2 மணி 40 நிமிடத்தில் செல்லலாம்

நாட்டின் முதல் புல்லட் ரயில் மும்பை - ஆமதாபாத் இடையே இயக்கப்பட உள்ளது. ஜப்பான் நிதியுதவியுடன் இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 350 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய வகையில் புல்லட் ரயில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. எனினும் அதிகபட்சமாக மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் புல்லட் ரயில் இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை அமலுக்கு வந்தால் மும்பை - ஆமதாபாத் இடையே 508 கி.மீ. தூரத்தை 2 மணி நேரத்தில் சென்றடையலாம். இந்த சேவை 2023-ம் ஆண்டு தொடங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டின் 2-வது புல்லட் ரயில் சேவை டெல்லி - வாரணாசி இடையே திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசி கோயில்கள் நிறைந்த நகரமாகும். இந்த வழித்தடத்தில் புல்லட் ரயில் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

டெல்லி - வாரணாசி இடையே உள்ள 782 கி.மீ. தூரத்தை 2 மணி 40 நிமிடத்தில் சென்றடையலாம். உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அதற்கு முன்னர் இத்திட்டப் பணிகளை விரைவு படுத்த மத்திய அரசு உத்தர விட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புல்லட் ரயிலில் டெல்லியில் இருந்து லக்னோவுக்கு (506 கி.மீ. தூரம்) 1 மணி 45 நிமிடத்தில் சென்றுவிடலாம். டெல்லியில் புறப்படும் புல்லட் ரயில் அலிகார், ஆக்ரா, கான்பூர், லக்னோ, சுல்தான்பூர் வழியாக வாரணாசி சென்றடையும்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘டெல்லி - வாரணாசி புல்லட் ரயில் திட்டம் குறித்த முதற்கட்ட ஆய்வறிக்கையை ஸ்பெயின் நிறுவனம் அளித்துள் ளது. இதுகுறித்து ரயில்வே வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி னார்கள். இறுதி அறிக்கையை வரும் நவம்பர் மாதம் ஸ்பெயின் நிறுவனம் சமர்ப்பிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x