பதவி உயர்வில் இடஒதுக்கீடு ரத்து எதிரொலி: 10,000 தலித் ஊழியர்கள் கர்நாடகாவில் பதவியிறக்கம்

பதவி உயர்வில் இடஒதுக்கீடு ரத்து எதிரொலி: 10,000 தலித் ஊழியர்கள் கர்நாடகாவில் பதவியிறக்கம்
Updated on
1 min read

‘பதவி உயர்வில் இட ஒதுக்கீடு ரத்து' என்ற உச்ச நீதிமன்ற உத்தரவால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலித் அரசு ஊழியர்கள் பதவி இறக்கத்தைச் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆதர்ஷ் கே கோயல், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, “கடந்த 1978-ம் ஆண்டு 'அரசு பணியில் இட ஒதுக்கீடு மூலம் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பதவி உயர்வு வழங்கப்படும்' என கர்நாடக அரசு கொண்டு வந்த சட்டம் ரத்து செய்யப்படுகிறது. பணி மூப்பின் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். எனவே 3 மாதத்திற்குள் வழங்கப்பட்ட பதவி உயர்வு அனைத்தையும் கர்நாடக அரசு திரும்பப்பெற வேண்டும்” என உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலான தலித் மற்றும் பழங்குடியின அரசு ஊழியர்கள் பதவி இறக்கத்தைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் முறையாக வாதிடாமல் அலட்சியமாக இருந்த மாநில‌ அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக தலித் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வரும் 2018-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால், தலித் அரசு ஊழியர்கள் மற்றும் தலித் மக்க‌ளின் வாக்குகள் தங்களுக்கு எதிராக மாறிவிடும் என்ற அச்சம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. எனவே முதல்வர் சித்தராமையா தலித் வாக்கு வங்கியை தக்க வைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

இதுகுறித்து ச‌ட்ட அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா கூறும்போது, “உச்ச நீதிமன்றத் தின் தீர்ப்பை மறுஆய்வு செய் யக்கோரி சீராய்வு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in