

மகாராஷ்டிர மாநிலத்தில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் ரூ.1 நாணயங்களாக ரூ.8,500 முன்வைப்புத் தொகை செலுத்தி தேர்தல் அதிகாரிகளை திணறச் செய்தார்.
மகாராஷ்டிர சட்டமேலவை யின் நாக்பூர் மண்டல ஆசிரியர் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 3-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வரு கிறது. இந்நிலையில் கட்சிரோலி மாவட்டத்தில் இருந்து விலாஸ் சங்கர்ராவ் பலம்வார் என்ற சுயேச்சை வேட்பாளர் நேற்று நாக்பூரில் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவர் ரூ.10,000 முன்வைப்புத் தொகை யாக செலுத்தினார். இதில் 8,500-க்கு ரூ.1 நாணயங்களாக இருந்தன. இந்த நாணயங்களை 4 பைகளில் தேர்தல் அதிகாரியின் அறைக்கு விலாஸ் சங்கர்ராவ் கொண்டுவந்தார். இந்த நாணயங்களை எண்ணி முடிக்க தேர்தல் அதிகாரிகளுக்கு சில மணி நேரம் பிடித்தது.
இதுகுறித்து விலாஸ் சங்கர்ராவ் கூறும்போது, “எனது முன்வைப்பு தொகைக்காக எனது தொகுதியில் அரசு உதவி பெறாத பள்ளி ஆசிரியர்கள் 8,500 பேர் தலா ரூ.1 வீதம் கொடுத்தனர். எஞ்சிய ரூ.1,500 மட்டுமே எனது சொந்தப் பணமாகும்.
அரசு உதவி பெறாத பள்ளி ஆசிரியர்களின் நலனுக்காகவே இத்தேர்தலில் போட்டியிடுகிறேன். அரசின் பாராமுகத்தால் இவர்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்” என்றார்.